‛16 வயதினிலே' தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்

தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு (77) வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் சென்னையில் நேற்று(ஜூலை 11) காலமானார். அவரது மறைவுக்கு பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. கமல், ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த ‛16 வயதினிலே' படத்தில் தான் இயக்குனராக பாரதிராஜா அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்த பெருமை ராஜ்கண்ணுவையே சேரும். இந்த படத்தை இவர் தான் தயாரித்தார். தொடர்ந்து ராதிகாவின் கிழக்கே போகும் ரயில், ராஜேஷ், பாக்யராஜ் நடித்த கன்னி பருவத்திலே, கமலின் மகாநதி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தார். இவரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிராஜா வெளியிட்ட இரங்கல் செய்தில், ‛‛ “16 வயதினிலே” திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்'' என தெரிவித்துள்ளார்.

ராதிகா வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛நான் அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு என் திரையுலக பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர். அவர் மீது மிகுந்த மரியாதையும், அற்புதமான நினைவுகளும் உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் உடல் சென்னை, சிட்டலம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அன்னாரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று(ஜூலை 12) நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.