சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது பிக் பாஸ்.
இதுவரை 6 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான 7வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
பிக் பாஸ் 7வது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் 7வது சீசனுக்கான ப்ரோமோ ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ ரெடி:விஜய் டிவியின் டீஆர்பி கன்டெய்னரான பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துவிட்டது. ஹாலிவுட், பாலிவுட்டைத் தொடர்ந்து கோலிவுட்டில் அறிமுகமான இந்த நிகழ்ச்சியை, முதல் சீசனில் இருந்தே கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கொரோனா நேரத்தில் மட்டும் சிம்பு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கமலுக்குப் பதிலாக இந்நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்திருந்தனர்.
கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 6ல், சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வென்றார். விக்ரமன், ஷிவின், அசீம் இவர்கள் மூன்று பேரும் பிக் பாஸ் ஃபைனல் ஸ்டேஜ் வரை சென்றனர். இதில் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இறுதியாக அசீம் தான் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்தார். இது பிக் பாஸ் ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்தமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் தான் பிக் பாஸ் 7வது சீசனை ஹோஸ்ட் செய்யவிருப்பதாகவும், இந்த சீசனுக்காக 130 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 7ன் ப்ரோமோ ஷூட்டில் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார்.

கடந்த வாரம் சென்னை EVP பிலிம் சிட்டியில் பிக் பாஸ் சீசன் 7-க்கான ப்ரோமோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று நடித்து கொடுத்துள்ளாராம். இதனால் விரைவில் பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த சீசன் ஆகஸ்ட் 2வது வாரம் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அதேபோல், பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக விஜய் டிவி நட்சத்திரங்களான மாகாபா ஆனந்த், KPY சரத், உமா ரியாஸ், பாவானா ஆகியோர் பங்கேற்பதாக சொல்லப்படுகிறது. இவர்களுடன் மேலும் சில விஜய் டிவி பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் தவிர சீரியல் நட்சத்திரங்கள், ஃபீல்ட் அவுட் ஆன சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பிக் பாஸ் சீசன் 7ல் களமிறங்கவுள்ளார்களாம்.