கொழும்பு:இலங்கையில், 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு, தன் சொந்த பணத்தில் இருந்து 2.60 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிரிசேனவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதல் தவணையாக 40 லட்சம் ரூபாயை சமீபத்தில் வழங்கினார்.
கடந்த 2019, ஏப்., 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தின் போது, இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் குண்டு வெடித்தது.
ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டாக செயல்பட்டு இந்த நாச வேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 11 இந்தியர்கள் உட்பட, 270 பேர் உயிரிழந்தனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
பயங்கரவாத தாக்குதல் நடக்கப் போவதாக அரசுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தும், அப்போதைய அதிபர் மைத்ரிபால சிரிசேன அலட்சியமாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த ஜன., மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு, முன்னாள் அதிபர் சிரிசேனா, தன் சொந்த பணத்தில் இருந்து 2.60 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த தொகையை, ஜூலை 12க்குள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இழப்பீடு தொகையில் 40 லட்சம் ரூபாயை, முதல் தவணையை கடந்த மாதம் 28ம் தேதி சிரிசேனா அளித்தார்.
மீதமுள்ள தொகையை, 2024, ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20க்குள் 10 தவணையாக வழங்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தவிர, இலங்கை போலீஸ் துறையின் முன்னாள் தலைவர் புஜித் ஜெயசுந்தரா மற்றும் அந்நாட்டின் உளவுத்துறை முன்னாள் தலைவர் நிலந்தா ஜெயவர்தனே ஆகியோர் தலா 2 கோடி ரூபாயும், ராணுவ முன்னாள் செயலர் ஹேமசிரி பெர்னாண்டோ 1.30 கோடி ரூபாயும் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இவர்கள் முதல் தவணையாக தலா 2.50 லட்சம் ரூபாய் வரை அளித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்