தன்பாத், ஜார்க்கண்டில் பள்ளிக்கு பொட்டு வைத்து சென்ற மாணவியை, ஆசிரியர் தாக்கியதால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள தெடுல்மரியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி சமீபத்தில் பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றார்.
இதற்கு, பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர் ஒருவர், பிற மாணவ – மாணவியர் முன்னிலையில் பொட்டு வைத்து சென்ற அந்த மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
வீட்டிற்கு வந்த மாணவி அடுத்த சில நிமிடங்களில் தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பள்ளி சீருடையுடன் தற்கொலை செய்த அவர், தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து, மாநில குழந்தைகள் நலக்குழு தலைவர் உத்தம் முகர்ஜி கூறுகையில், ”சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., வாரியத்தின் அங்கீகாரம் இல்லாமல் பள்ளி செயல்பட்டு வந்ததால், இது குறித்த நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement