தலைமைச் செயலாளருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: இதுதான் ரொம்ப முக்கியம்!

ஒரு ஆட்சி எப்படி இருக்கிறது என்று மக்களிடம் கேட்டால் அவர்கள் எதன் அடிப்படையில் பதில் அளிப்பார்கள்? தாங்க்ள் வைக்கும் கோரிக்கைகளை அரசு காது கொடுத்து கேட்கிறதா, தங்கள் குறைகளை கூறும் போது அதை போக்க எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பொறுத்தே இது நமக்கான அரசு என்று மக்கள் கருதுவார்கள்.

பொதுமக்களின் மனுக்களைப் பெற்று அதில் உடனடி நடவடிக்கை எடுக்கவே முதல்வரின் முகவரி துறை உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரை சந்தித்து நேரடியாக தரப்படும் புகார்கள், ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் ‘முதல்வரின் முகவரி’க்கு வரும் புகார்களை அதிகாரிகள் ஆராய்ந்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வரின் முகவரி துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “பல்வேறு துறை அலுவலர்கள், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பெறப்படும் கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து உரிய தீர்வுகளை கண்டு பொதுமக்களுக்கு அதன் விபரத்தை தெரிவிக்காத காரணத்தினாலேயே தான் மக்கள் முதலமைச்சரின் முகவரி துறைக்கு மனுக்களை அனுப்புகிறார்கள்.

அரசின் சேவைகள் சான்றிதழ்கள் போன்றவை கூடுமானவரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வருவாய் துறையை கேட்டுக்கொள்கிறேன். தற்போது ஆன்லைன் முறை இருப்பதாக கூறப்பட்டாலும் நடைமுறையில் பார்க்கும் போது அதில் பல சிக்கல்கள் உள்ளதாக அறிகிறேன். அதனை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டியினை வழங்கினார் ஆட்சியர்

மக்களுக்கு சேவைகளை வழங்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் மக்கள் எளிதில் அணுகி சேவைகளை பெறக்கூடிய ஒரு இடமாக இருக்க வேண்டும். தாமதங்களும் வீண் அலைக்கழிப்புகளும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மக்களும் அவர்கள் அளிக்கும் மனுக்களும் அலுவலகங்களில் மதிக்கப்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டால் தான் அரசு தன் கடமையை, பணியை முறையாக ஆற்றுவதாக கருதப்படும்” என்று கூறினார்.

மேலும் அவர், “தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர் தங்களது மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களில் முதல்வரின் முகவரி துறை மனுக்கள் முறையாகவும் விரைவாகவும் தீர்வு காணப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அது மட்டுமல்ல அனைத்து அரசுத் துறை செயலர்களும், துறை தலைவர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தங்கள் துறை மற்றும் மாவட்டங்களில் பெறப்படும் மனுக்களை கவனமாக ஆய்வு செய்து முறையாக தீர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.