கவுஹாத்தி: பொது சிவில் சட்டத்துக்கு நடுவே பலதார திருமணத்தை முற்றிலுமாக தடுக்கும் வகையில் அசாம் மாநில அரசு முக்கிய முடிவை கையில் எடுத்துள்ளதாக அம்மாநில பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக சட்ட கமிஷன் மூலம் மத்திய அரசு கருத்து கேட்பு நடத்தி வருகிறது.
இந்த கருத்து கேட்பை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதாவது இஸ்லாமியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வதாகவும், அதனை தடுக்கும் நோக்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு எதிரானதாக உள்ளது. இதனால் அதனை பாஜக கைவிட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆனால் பிரதமர் மோடியோ, ‛‛பொது சிவில் சட்டம் யாருக்கும் எதிரானது இல்லை. எதிர்க்கட்சியினர் உள்பட அனைத்து அமைப்பினரும் இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என கூறி வருகிறார். இந்த விவகாரத்தில் பொது சிவில் சட்டத்தை அசாமில் செயல்படுத்த தயாராக இருப்பதாக அங்கு ஆட்சி செய்யும் பாஜகவின் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக நிபுணர்குழுவையும் அவர் நியமனம் செய்தார்.
இது ஒருபுறம் இருக்க அசாமில் பலதார மணத்துக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி ஹேமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: மாநிலத்தில் பலதார மணத்தை உடனடியாக தடுத்து நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் சட்டசபை கூட்டத்தொடரில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. அடுத்த சட்டசபை கூட்டம் என்பது செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
ஒருவேளை இந்த கூட்டத்தொடரில் சில காரணங்களால் நடக்காமல் போனால் ஜனவரியில் நடக்கும் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவோம். மேலும் மத்திய அரசு சார்பில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் இந்த சட்டம் என்பது தேவையிருக்காது. இதனால் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அதனுடன் இந்த எங்களின் சட்டம் சேர்க்கப்பட்டு விடும்” என்றார்.