தமிழகத்தில் விளைநிலங்களின் மண் வளத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2022-23- ம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் ‘தமிழ் மண்வளம்’ என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்தது. விவசாயிகள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார்.

விவசாயிகள், கணினி அல்லது செல்போன் மூலமாக http://tnagriculture.in/mannvalam/ எனும் இணையதள முகவரியில் ‘தமிழ் மண்வளம்’ முகப்பினை அணுகி
தங்கள் விளைநிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம், விளை நிலத்தின் புல எண், உட்பிரிவு ஆகியவற்றை பதிவு செய்தால் உடனடியாக மண் வளம் குறித்த அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு விவசாயிகளின் கைபேசியில் மண்வள அட்டையாக கிடைக்கும்.
இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட மண்வள அட்டையின் மூலம் மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை, களர் உவர் நிலை, அங்கக கரிமம் மற்றும் சுண்ணாம்புத்தன்மை போன்ற வேதியியல் குணங்கள் பற்றிய விவரங்களும் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் போன்ற விவரங்களும்

கந்தகம், இரும்பு, மாங்கனீசு, தாமிரம் போன்ற நுண்ணூட்ட சத்துக்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
” விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விவசாய நிலங்களில் உள்ள மண்ணின் நிலை அறிந்து சாகுபடி செய்து பயனடையலாம்” என வேளாண்துறை தெரிவித்துள்ளது.