பாலிவுட் நடிகர் அர்மான் கோலிவுடன் நீரு ரந்தவா என்ற பெண் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சண்டையில் முடிந்தது. இதில் அர்மான் கோலி தனது காதலியை கடுமையாக அடித்து உதைத்தார். இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த நீருவிற்கு மருத்துவமனையில் 15 தையல் போடப்பட்டது. இது தொடர்பாக நீரு போலீஸில் புகார் செய்தார். உடனே நடிகர் அர்மான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாக அர்மான் கோலி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனு விசாரணைக்கு வந்தபோது அர்மான் கோலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாரிக், அர்மான் கோலியின் பெற்றோருக்கு 90 வயதாகிவிட்டது. எனவே அவர்களை கவனித்துக்கொள்ள அர்மான் கோலி தேவை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி கொடுப்பதாகவும், முதலில் 50 லட்சமும், பின்னர் தவணையாக 50 லட்சமும் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இதையடுத்து நண்பர்கள் முன்னிலையில் பேசி இது தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதன் படி உடனே 50 லட்சம் கொடுக்கப்பட்டது.
பாக்கி தொகைக்கு அர்மான் சகோதரர் ராஜ்னிஷ் தலா 25 லட்சத்திற்கு இரண்டு காசோலை கொடுத்தார். உடனே அர்மான் கோலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதோடு அவர் மீதான வழக்கும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அர்மான் தரப்பில் கொடுக்கப்பட்ட இரண்டு காசோலையும் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நீரு, இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில் அர்மான் கோலி குடும்பம் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், எனவே அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இம்மனு நீதிபதி நிதின் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், அர்மான் கோலி பணம் கொடுக்கவில்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்தனர். அதோடு ரத்து செய்யப்பட்ட வழக்கும் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.