தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரூ.928 கோடிக்கு பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல்: அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 928 கோடி ரூபாய் மதிப்பில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிச்சந்தையில் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்திடவும் கருணாநிதியால் கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர், 10.07.2023 அன்று அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் விலைவாசி உயர்வு தொடர்பாக நடத்திய ஆய்வுக் கூட்டத்தினைத் தொடர்ந்து என் தலைமையிலும் தலைமைச் செயலாளர் முன்னிலையிலும் விலைக் கட்டுப்பாட்டு குழுக் கூட்டம் 11.07.2023 அன்று நடைபெற்றது.

முதல்வர், மத்திய வர்த்தகம் & தொழில் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சருக்கும், தமிழத்துக்கு மாதம் மத்திய அரசு 10,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 10,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்திடக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.

விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தும் விதமாக, உடனடியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023 மாதங்களுக்குத் தேவையான 40,000 மெ.டன் துவரம் பருப்பு 464.79 கோடி ரூபாய்க்கும் ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023 மாதங்களுக்குத் தேவையான 5.10 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 463.48 கோடி ரூபாய்க்கும் மொத்தம் ரூ.928.27 கோடி மதிப்பில் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டலக் கிடங்குகளிலும் இறக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தக் கிடங்குகளிலிருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க நியாயவிலைக் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய் விலையில் வழங்கப்பட்டுவருகிறது. இன்று முதல் சென்னையில் ஏழு அமுதம் அங்காடிகளிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் ஏழு நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய்க்கும் துவரம் பருப்பு அரை கிலோ 75 ரூபாய்க்கும் உளுந்தம் பருப்பு அரை கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதற்குத் தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வரும் விலைக் கட்டுப்பாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது.

குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மூலமாகவும் இன்றியமையாப் பொருள்கள் பதுக்கப்படாமலிருக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க மேற்குறிப்பிட்டவாறு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.