”வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு மத்திய அரசுக்கு திட்டமில்லை” என வருவாய் துறை செயலாளர் சஞ்சீவ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

2022-23 ஆம் நிதியாண்டுக்கு வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் ஜூலை 31ஆம் தேதி ஆகும். இந்த கடைசி தேதி முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இன்னும் பல லட்சம் பேர் வருமான வரித் தாக்கலை செய்யாமலே இருக்கின்றனர். அடுத்த வாரம் அல்லது அதற்கடுத்த வாரத்தில் வரித் தாக்கலை செய்துகொள்ளலாம் என்று பலர் இருக்கின்றனர். இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் கடைசி தேதி நீட்டிக்கப்படுமா என வரி செலுத்துவோர் மத்தியில் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கடைசி தேதியை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என வருவாய் துறை செயலாளர் சஞ்சீவ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “கடைசி தேதியை நீட்டிப்பதற்கு பரிசீலனையும் இல்லை. அப்படி ஒரு நோக்கமும் எங்களுக்கு இல்லை. வரி செலுத்துவோர் அனைவரும் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் எனது அறிவுரை. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு கடைசி தேதி நீட்டிக்கப்படாது. ஆக, விரைவாக வரித் தாக்கல் செய்துவிடுவது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை தவறவிட்டால் என்னாகும்?
வருமான வரித் துறை வெளியிட்டுள்ள தகவல்படி, கடைசி தேதிக்குப்பின் வருமான வரித் தாக்கல் செய்தால் அதற்கு 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
பொதுவாகவே, கடைசி நேரத்தில்தான் பல லட்சம் பேர் வருமான வரித் தாக்கல் செய்வார்கள். இதனால் வருமான வரி இணையதளத்தின் செயல் வேகம் குறையும். சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்பட்டு வரிக் கணக்கு தாக்கலை செய்ய முடியாமல்கூட போகும். இதனால், நீங்கள் கடைசி தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யாமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே, கடைசி தேதி வரை காத்திருக்காமல், உடனடியாக வருமான வரித் தாக்கல் செய்துவிட்டால், அபராதத்தைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் வீண் டென்ஷனையும் தவிர்ப்பதே நல்லது!