கலைஞர் எனும் நூலகம்: மாணவர்களிடம் கலைஞரை அறிமுகப்படுத்திய ஸ்டாலின்

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கலைஞர் சிறு வயது முதல் எழுத்து, பேச்சு, அரசியல், கலை, ஆகியவற்றில் காட்டிய ஈடுபாடு அதில் பெற்ற வெற்றிகள் குறித்து பட்டியலிட்டார்.

திமுக ஆட்சிக் காலத்தில் முன்னேடுக்கப்பட்ட திட்டங்களையும் எடுத்துரைத்தார். விழாவில் பேசிய ஸ்டாலின், “தி.மு.க.வின் முதல் ஆட்சிக்காலத்திலேயே, தமிழ்நாட்டில் ஏராளமான அரசுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் எவ்வளவு தெரியுமா? 68 தான்! ஆனால், கலைஞர் முதலமைச்சராக இருந்த 1969 முதல் 1975 வரையிலான காலக்கட்டத்தில், அதாவது ஏழு ஆண்டுகளில், 97 அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டது!

கோவையில் வேளாண் பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடைப் பல்கலைக் கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம்! உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம், ஏராளமான மருத்துவக் கல்லூரிகள், இளநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ரத்து, இப்படி, கல்வியைக் கொடுத்துவிட்டால், ஒரு மனிதருடைய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்று அதற்கான மொத்த அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தது கலைஞரோட தி.மு.க. ஆட்சி. இதனுடைய தொடர்ச்சியாகதான் இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

தரமான கல்வி வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்.

இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் இயக்கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களின் பசியை போக்க முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்கள பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

மகளிர் உரிமை திட்டம் குறித்து விளக்கம் அளித்த ஆட்சியர்

அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டம். வருகிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப் போகிறோம்.

தகுதியுடைய குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறுவார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே, இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான, மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகிறோம். இந்தியாவில், மற்ற மாநிலங்களும் நம்மை பின்பற்றக்கூடிய அளவிற்கு மகத்தான திட்டங்களை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் திராவிட மாடல் கோட்பாடு இதுதான். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஆட்சிப் பொறுப்பின் மூலமாக அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

மக்களுக்கு பணி செய்ய, தொண்டு செய்ய கிடைத்த வாய்ப்பாகதான் ஆட்சிக்கு வந்து இருப்பதையும், முதலமைச்சர் என்கின்ற நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் நான் நினைக்கிறேன்.

தமிழ்நாடு அனைத்துத் துறையிலும், முன்னேறி இந்தியாவோட தலைசிறந்த மாநிலமாக ஆனது என்று சொல்லவேண்டும். அந்த ஒற்றை இலக்குடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களின் அரசாக, அனைத்து தரப்பு மக்களும் போற்றும் அரசாக நமது தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

மாணவக் கண்மணிகளுக்கு நான் சொல்வது, அரசு உருவாக்கித் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கின்ற காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள். நாளைய நம்பிக்கை நீங்கள். நாளைய எதிர்காலம் நீங்கள். உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, இந்த நாடே உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.