செம ட்விஸ்ட்! இந்திய அணிக்கு கேப்டனாகும் சிஎஸ்கே வீரர் – அதுவும் இந்த தொடருக்கா!

Indian Cricket Team For Asian Games: சீனாவில் ஹாங்சோவ் நதரில் வரும் செப். 19 ஆம் தேதி முதல் அக். 8ஆம் தேதி வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்றிரவு அறிவித்தது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் கடைசியாக 2014ஆம் ஆண்டில் கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது. ஆனால், அதில் இந்தியா கிரிக்கெட்டில் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இம்மாத தொடக்கத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்க பிசிசிஐ அனுமதியளித்தது. 

கேப்டனாகும் ருதுராஜ்

இருப்பினும், அக்டோபர் மாதம் இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இளம் வீரர்களை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்ததாக தெரிகிறது. மேலும், இந்த அணிக்கு ஷிகர் தவாண் கேப்டனாக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

15 வீரர்கள் மற்றும் 5 காத்திருப்பு வீரர்கள் கொண்ட ஸ்குவாடை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்றிரவு அறிவித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ருதுராஜ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு டி20 அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான அணியில் இவர்களுக்கு பிசிசிஐ வாய்பபை வழங்கியுள்ளது. 

NEWS Team India (Senior Men) squad for 19th Asian Games: Ruturaj Gaikwad (Captain), Yashasvi Jaiswal, Rahul Tripathi, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Washington Sundar, Shahbaz Ahmed, Ravi Bishnoi, Avesh Khan, Arshdeep Singh, Mukesh Kumar, Shivam Mavi, Shivam…

— BCCI (@BCCI) July 14, 2023

இளம் படைக்கு வாய்ப்பு 

முன்னர் கூறியது போன்ற ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஆடவர் பிரிவில் இந்திய ‘பி’ டீம் பங்கேற்கிறது. தற்போது நடந்த முடிந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 171 ரன்களை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும், திலக் வர்மா, ரவி பிஷ்னோய், சிவம் டூபே, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங் என ஐபிஎல் தொடரில் கலக்கியவர்களுக்கும் பிசிசிஐ வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த அணிக்கு தலைமையேற்கும் ருதுராஜ் கெய்க்வாட் தற்போதைய மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். இருப்பினும், அவர் பிளேயிங் லெவனில் தேர்வாகவில்லை. 

டி20 வடிவத்தில்…

ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் இந்திய அணி குறித்து பிசிசிஐ நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில்,”ஜெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக பிங்ஃபெங் கிரிக்கெட் மைதானத்தில் வரும் செப். 19ஆம் தேதி முதல் அக். 8 வரை நடைபெற உள்ள 19வது ஆசிய விளையாட்டு ஹாங்சூ 2022 தொடருக்கான இந்திய ஆடவர் அணியை, அதன் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. ஆடவர் கிரிக்கெட் போட்டி செப். 28ஆம் தேதி முதல் அக். 8ஆம் தேதி வரை டி20 வடிவத்தில் நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளது. 

ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஸ்குவாட்

இந்திய ஆடவர் அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் சிங், அர்ஷ்தீப் கான் , முகேஷ் குமார், சிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)

காத்திருப்பு வீரர்கள்: யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.