`தர்மத்தின் தலைவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாகக் கால்பதித்து வெற்றிக் கொடியை நாட்டியவர், அடுத்தடுத்து தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் எனப் பல அவதாரங்கள் எடுத்து அதிலும் வெற்றி வாகை சூடியவர் நடிகை குஷ்பு. ஆனந்த விகடன் யூடியூப் தளத்தின் `கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ நிகழ்ச்சியில் நடிகை மற்றும் அரசியல் தலைவரான குஷ்பு பேட்டியளித்திருக்கிறார். அவரது வாழ்வில் அவர் கடந்த வந்த அனுபவங்கள் குறித்து இந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
‘நகத் கான்’ என்கிற பெயரை ‘குஷ்பு’ என மாற்றியிருக்கிறீர்கள், உங்களது குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். உடன் பிறந்தவர்கள் மூன்று அண்ணன்கள். நான் கடைக்குட்டி. நான் அம்மா செல்லம். அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான், என் அப்பா மீது எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. நான்காவது குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டது என்று நான் பிறந்த மூன்று நாள்கள் வரை என் தந்தை என்னை வந்து பார்க்கவில்லை. என்னுடைய அம்மாவும், மூன்று அண்ணனும்தான் என் உலகம். மும்பையில் நான் வளர்ந்தது எம்.ஐ.ஜி காலனியில்தான். அந்த காலனியில் நான் மட்டும்தான் பெண் குழந்தை. நானும் என் மூன்று அண்ணன்களும் சேர்ந்து அங்குள்ள ஆண்களுடன் கிரிக்கெட் விளையாடச் செல்வோம். ‘நீ பெண், நீ ஆண்களுடன் விளையாடக் கூடாது’ என்று எனது தாயார் என்னைத் தடுக்கவில்லை. அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கு எனது தாயார் எனக்குச் சுதந்திரம் கொடுத்தார்.”
சிறுவயதில் நமக்கு நிகழும் சோகங்கள் நம்முள் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது உங்கள் நினைவுக்கு வருவதென்ன?
“வாழ்க்கை இன்னும் தொடங்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் இன்றைக்கு எந்த செயல்களைப் புதுமையாகச் செய்யப் போகிறோம் என எதிர்பார்ப்பேன். ‘லிவ் ஃபார் எவிரிடே’ என்பதை எப்போதும் எடுத்துக்கொள்வேன். எனக்கு இப்போது 52 வயது. 52 வருடங்கள் நான் சந்தித்த அனைத்தும் ஓர் அனுபவம்தான். நான் எப்போதும் ஒவ்வொரு செயலிலும் எந்த மாதிரியான புதுமையைக் கற்றுக் கொள்ளப் போகிறேன் என்பதை நோக்கி நகர்வேன். எனக்கு நிகழ்ந்த சோகங்களை உள்ளேயே வைத்துக் கொள்ள மாட்டேன். நான் ரொம்பவே பாசிட்டிவ் பெர்சன். இந்த 52 வருடப் பயணத்தை ஒரு வார்த்தையில் எடுத்துரைத்தால் ‘ஓர் அழகான பயணம்’ என்று சொல்லலாம்.”

‘அம்மா’ என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்குத் தோன்றுவது என்ன?
“எனது தாயார் என்னுடன்தான் இருக்கிறார். அவருடன் சண்டைதான் அதிகம். இருவரும் சண்டையிட்டு ஒரு நாள் பேசாமல் இருப்போம். அடுத்த நாள் அவரே வந்து ‘சாப்டியா’ என்று வாஞ்சையுடன் கேட்பார். எனது திருமணத்திற்குப் பிறகு தாயாரைப் பிரிந்துதான் இருந்தேன். நாங்கள் புதிய வீடு கட்டிய பிறகு எனது கணவர் என்னிடம், ‘என் தாயார் என்னுடன்தான் இருக்கிறார், உன் தாயாரையும் இங்கேயே உடன் வைத்துக் கொள்’ என்றார். எனது மாமியார் கோவை, கேரளா போன்ற தெற்குப் பகுதியின் ட்ச் இருப்பவர். எனக்கு மும்பை போன்ற வடக்குப் பகுதியின் டச்.
எனது தாயாரைப் பார்த்ததும் என் நினைவுக்கு வருவது அவருடைய மன்னிப்பு குணம்தான். என் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களைச் சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார். அவர்கள் எந்த வகையான உணவுகளை விரும்புவார்கள் எனக் கேட்டறிந்து அந்த உணவையே பரிமாறுவார். எனது தாயாருக்கு எதிரியாக இருந்தாலும் கெடுதல் செய்யத் தெரியாது. அவர் 4 அடி உயரம்தான் இருப்பார், ஆனால் இந்த உலகத்திலேயே என் தாயார்தான் அழகு, அவருடைய ஜீன்தான் எனக்கும்!”
சினிமா என்பது கனவா? சூழ்நிலையா?
“பள்ளியில் நான் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர். படிக்க வேண்டும் எனப் பல ஆசை இருந்தது. எங்கள் குடும்பத்துடன் நடிகை ஹேமா மாலினி கிளோஸ். என்னுடைய அப்பா டி.வி, ரேடியோ பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். அப்போது ஹேமா மேம் வீட்டிற்குச் சென்று சர்வீஸ் செய்வார். சிறு வயதில் ஹேமா மேமின் பெரிய வீட்டைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது வீட்டில் அவர் வாங்கிய விருதுகள் இருக்கும். அவருடைய வீடு சினிமா வீடு போன்ற தோற்றத்தில் இருக்காது. அவரது வீட்டிற்குச் செல்லும் போது ஹேமா மேம் என்னை மடியில் வைத்துக் கொண்டு மேக் அப் செய்வார். எனக்கு நடனம் ஆடுவதற்குக் கற்றுத்தருவார்.

நான் முதன்முதலில் இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவு வகைகளைச் சாப்பிட்டது அங்குதான். ஹேமா மாலினி மேம்மினுடைய தாயார் ஒரு படத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் ஒரு சிறு வயதுக் குழந்தை கதாபாத்திரத்திற்கு என்னை நடிக்க வைப்பதற்குக் கேட்டார். முதலில் பள்ளியை கட் செய்துவிட்டு வரமாட்டேன் எனக் கூறினேன். அதன் பிறகு ‘நான் நடிப்பதற்கு வந்தால் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு வெண்ணிலா ஐஸ்கிரீம் வேண்டும்’ எனக் கூறினேன். இவையெல்லாம் நிகழும் போது எனக்கு 8 வயது. அப்படிதான் சினிமாவிற்குள் நுழைந்தேன். அதன் பிறகு ஹேமா மேமினுடைய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது என்னை வைத்து சினிமாவில் சம்பாதித்துக் கொள்ளலாம் என எனது தந்தைக்கு ஒரு எண்ணம் இருந்தது. அதன் பின்பு 9-ம் வகுப்பில் என் படிப்பை நிறுத்திவிட்டேன். சென்னை வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. அனைவருக்கும் ஒரு திறமை இருக்கும். எது நடந்தாலும் நன்மைதான். நான் என் படிப்பைத் தொடர்ந்திருந்தால் இந்தப் புகழ் எனக்குக் கிடைத்திருக்காது, என் கணவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்காது, இப்படி ஓர் அழகான குடும்பம் கிடைத்திருக்காது.”

‘தர்மத்தின் தலைவன்’ முதல் படம், தமிழ்ச் சூழல் எப்படி இருந்தது?
“தெலுங்கில் நான் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு கன்னடத்தில் நடித்தேன், அதுவும் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகுதான் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எனது தந்தையாரும் தாயாரும் பிரிந்த பிறகு அண்ணன்கள், அம்மா என அனைவரும் சென்னைக்கு வந்துவிட்டோம்.
‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படத்தில் எனக்குப் பெரிய கதாபாத்திரம் கிடையாது. தெலுங்குத் திரையுலகிலும், கன்னடத் திரையுலகிலும் பிஸியாகத்தான் இருந்தேன். ‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு இம்பேக்ட்ஃபுல் படம் கொடுக்க வேண்டும் என எண்ணி அடுத்த படத்தை சைன் பண்ணாமல் காத்திருந்தேன். அந்தக் காத்திருப்பின் பலனாகக் கிடைத்ததுதான் ‘வருஷம் பதினாறு’ திரைப்படம். அந்த திரைப்படத்தில் ‘ராதிகா’ கதாபாத்திரத்திற்கு வெகுளியாகப் பெரிதும் பரிட்சியமில்லாத முகம் தேவைப்பட்டது. நான் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவேன் என என்றும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ‘வருஷம் பதினாறு’ திரைப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்தேன்.
வெற்றி இலகுவானதுதான். ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்வது கடினம். எனக்குக் கிடைத்த வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்ளத்தான் நினைத்தேன். சில நேரங்களில் திட்டங்கள் இல்லையென்றாலும் தெளிவு வேண்டும். அடுத்த நாம் செய்யப் போகிற செயல்கள் நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பாதிக்கக் கூடாது என்று ஒரு பத்து முறை யோசிப்பேன். ஆனால், ஒரு செயலில் கால் வைத்துவிட்டால் பின் வாங்க மாட்டேன். தவறு நடந்தாலும் அதனை அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த செயலுக்கு நகர்ந்துவிடுவேன். நாம் நமக்கான வாய்ப்புகளைத் தேட வேண்டும். கடவுள் நமக்கு ஆறாம் அறிவைத் தேடுதலுக்குத்தான் கொடுத்திருக்கிறார்.”

காதல் அரங்கேறிய தருணம்?
“என் கணவர்தான் முதலில் வந்து எனக்கு புரொப்போஸ் செய்தார். அவருக்கு அதுதான் முதல் திரைப்படம். நான் அப்போதுதான் பரிட்சியமான நாயகியாக இருந்தேன். செட்டில் இருந்த அனைவரும் என் கணவரை, ‘நீ புரொப்போஸ் செய்தால் இந்தப் படம் பாதியில் நின்றுவிடும்’ என எச்சரித்தார்கள். ஆனால் என் கணவர் என்னிடம் வந்து, ‘நாளை உனக்கும் எனக்கும் குழந்தை பிறந்தால் உன்னைப் போல் இருக்குமா அல்லது என்னைப் போல் இருக்குமா’ எனக் கேட்டார். அதன் பிறகு அவர் என் அண்ணன்களிடம் வந்து பேசினார். அதன் பிறகும், ‘நான் சொந்தமாக ஒரு வீடு கட்டிய பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வேன்’ என்றார். 1999-ல் அவர் சொந்த வீடு வாங்கினார். அதன் பிறகு 2000 இல் எங்களது திருமணம் நிகழ்ந்தது.”
திருமணம் என்கிற நிறுவனத்தைப் பற்றிய உங்களது கருத்து?
“ஒரு விஷயத்தைக் கொடுத்த பின்பு நமக்கு என்ன கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எந்த உறவுமுறையிலும் இருக்கக் கூடாது. நான் என் கணவருக்குத் தேவையானதைச் செய்வேன். என் கணவர் எனக்கு என்ன செய்வார் என்று எப்போதும் எதிர்பார்க்கமாட்டேன். ஆனால், எனக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் எனக்கு சாலிட் சப்போர்ட்டாக எப்போதும் உறுதுணையாக இருப்பார். அவர் இல்லையென்றால் நான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அன்பு, காதல் என அவருடன் பகிர்ந்து சில புரிதல்களுடன் நடந்து கொள்வேன். அதனால்தான் என் மாமியாரை நான் அம்மா என்று கூப்பிடும் அளவிற்கு உறவு உருவாவதற்குக் காரணம். என் தாயைப் போலத்தான் என் மாமியாரும். என் தாயுடன் சண்டை போடுவது போல என் மாமியாருடனும் போடுவேன்.”

தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க எனக் கட்சி மாறிய பிறகு, அதன் சித்தாந்தங்கள் வேறுபடுமே?
“நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்வதுதான் அனைத்திற்கும் அடிப்படையான நோக்கம். சிந்தனைகள் மாற்றம் பெறும் என நான் சொல்லமாட்டேன். அவரவர் வேலைப் பார்க்கும் விதம் மாற்றம் பெறும். அரசியலில் என்னுடைய ஆசான் என்று கலைஞர் கருணாநிதி ஐயாவைத்தான் இன்று வரை குறிப்பிடுவேன். அரசியலில் எதனைப் பேச வேண்டும், எதனைப் பேசக் கூடாது, மேடை நாகரீகம் எனப் பல விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதிதான். அவருக்கென நான் ஓர் இடம் வைத்திருக்கிறேன். எந்த காரணத்திற்கும் அந்த இடத்தை நான் நீக்க மாட்டேன். அதற்கு அவர் மேல் நான் வைத்திருக்கும் மரியாதைதான் காரணம்.
தி.மு.க-விலிருந்து விலகிய பிறகு நான் தி.மு.க-வை விமர்சித்திருக்கிறேன். தமிழ்நாட்டின் ஒரு பெண்ணாக எனக்கு அந்த உரிமை இருக்கிறது. தவறுகள் நடக்கும் போது அதனைத் தட்டிக் கேட்க வேண்டும். காங்கிரஸில் இருக்கும் போது பா.ஜ.க-வின் தவறுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதே சமயத்தில் பா.ஜ.க செய்த நல்ல செயல்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறேன். அந்தச் சமயம் கட்சியிலிருந்து என்னை, ‘எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இப்படிப் பேசக் கூடாது’ எனத் திட்டினார்கள். பா.ஜ.கா-வில் நான் இன்று சந்தோஷமாக இருக்கிறேன். எங்கள் கட்சியில் இவர்களையெல்லாம் உயர்த்திப் பேச வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இருக்காது.”
குஷ்புவின் விரிவான பேட்டியை வீடியோவாகக் காண, கீழேயுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும். இதன் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும்.