சென்னை: நடிகர் சிலம்பரசன் அடுத்தடுத்த படங்களில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவரது மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்கள் சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளன.
அடுத்ததாக கமல் தயாரிப்பில் STR48 படத்தில் இணையவுள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்திலும் சிம்பு இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.
யுவனுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தும் சிம்பு: நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய கேரியரை துவங்கியவர். குழந்தையாக, சிறுவனாக இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இளைஞாகவும் பல மாஸ் படங்களில் நடித்துள்ளார். தன்னை இயக்குநராகவும் வல்லவன் படத்தில் வெளிப்படுத்தினார். தொடர்ந்து இவர் படங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்களிடம் இந்தப் படம் ஏற்படுத்தியது. முன்னதாக மன்மதன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையையும் இவர் எழுதியிருந்தார்.
2006ம் ஆண்டில் வல்லவன் படம் வெளியாகி சிம்புவின் கேரியரில் சிறப்பாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு படங்களை சிம்பு இயக்கவில்லை. தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் சிம்பு காணப்படுகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு படம் இவருக்கு சிறப்பான ரீ என்ட்ரியாக அமைந்தது. இந்தப் படத்தில் டைம் லூப் பாணியில் திரைக்கதை அமைந்தது. படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
மாநாடு படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் கேங்ஸ்டராக நடித்திருந்தார் சிம்பு. இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் அதிகமான வரவேற்பை வெளிப்படுத்தினர். இந்தப் படமும் வசூல்ரீதியாக சிம்புவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சிறப்பாகவே அமைந்தது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் STR48 படத்தில் இணையவுள்ளார் சிம்பு. இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். படத்தின் தயாரிப்பிற்கு முந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மிகவும் சிறப்பாக மாற்றியுள்ள சிம்பு, மார்ஷியல் ஆர்ட்சையும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது மலேசியாவில் உள்ளார் சிம்பு. அவரது STR48 பட கெட்டப்பும் தற்போது வெளியாகியுள்ளது. மலேசியாவில் படத்தின் வேலைகளுக்காக அவர் செல்லவில்லை. மாறாக யுவன் சங்கர் ராஜாவின் High On U 1 இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிம்பு மலேசியா சென்றுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள இந்த இசைக் கச்சேரியில் யுவனுடன் இணைந்து சிம்புவும் பாடவுள்ளார். இதற்காக முன்னதாகவே மலேசியாவிற்கு தன்னுடைய பெற்றோருடன் சென்றுள்ளார் சிம்பு.