‘ஆஹா! ஆடி வந்துவிட்டது’ எனப் பலரின் மனதிலும் உற்சாகம் துள்ளல் நடைப் போட்டுக்கொண்டிருக்கும். ‘தள்ளுபடியில் பொருள்கள் கிடைக்கும்; விவசாயம் செழிக்கும்; கோயில்களில் விழாக்கள் நடக்கும்; வாழ்வு சிறக்கும்’ என இப்போதே ஆரவாரமாக ஆடியை வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த உற்சாகத் துள்ளலுக்கிடையே, ‘அடடா… ஆடி வந்துவிட்டதே!’ என புதுமணத் தம்பதிகள் ஏங்கவும் செய்கிறார்கள். காரணம், புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்துவிடுவார்கள்.

ஆனி கடைசி தேதியில் திருமணமாகியிருந்தாலும்கூட மறுநாளே ஆடி பிறந்தவுடன் மாமியார் வீட்டார் சீர்வரிசைகளை வைத்து, தங்கள் வீட்டுக்குப் பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
இந்த நிலையில், விலை உயர்வால் ‘மவுசு’ கூடியிருக்கும் தக்காளிப் பழங்களை தட்டு நிறைய வைத்து, ஆடி சீர்வரிசை வழங்கிய மாமியார் வீட்டாரின் அழைப்பைக் கண்டு, வியப்படைந்திருக்கிறார் வேலூர் மாப்பிள்ளை ஒருவர்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த கனிஷ்குமார் என்பவருக்கும், பள்ளிகொண்டாவைச் சேர்ந்த லீலா பிரியா என்பவருக்கும் சமீபத்தில்தான் திருமணமாகியிருக்கிறது. அதற்குள் ஆடி மாதம் வந்துவிட்டதால், மகளை அழைத்துச்செல்ல சீர்வரிசையுடன் மாமியார் வீட்டார் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்றது, அழைத்ததில்கூட ஆச்சர்யம் ஏற்படவில்லை. அவர்களின் சீர்வரிசைதான் கவனம் பெற்றிருக்கிறது. இனிப்புப் பலகாரங்கள், ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவையுடன் தட்டு நிறைய தக்காளிப் பழங்களையும் மாமியார் வீட்டார் வைத்திருந்ததைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் ஆச்சர்யத்தில் வியந்திருக்கிறார்கள்.