டோக்கியோ: தனிமையில் தவிக்கும் இளைஞர்களைக் குறிவைத்து கேர்ள் பிரண்டை வாடகைக்கு விடும் பிஸ்னஸை ஒரு நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் கேர்ள் பிரண்ட் மட்டுமின்றி பாய் பிரண்டையும் கூட நாம் வாடகைக்கு எடுக்கலாமாம்
காதல் குறித்தும் காதலிப்பது குறித்தும் இங்கே ஏகப்பட்ட கவிதைகளும் பாடல்களும் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் யாராவது ஒருவரைக் காதலித்து இருப்போம். அவர்களுடன் ஒரு பிணைப்பைக் கொண்டிருந்திருப்போம்.
ஆனால், இந்த பிணைப்பை நீண்ட கால கனெக்ஷனாக மாற்றுவது என்பது பலருக்கும் வராது. அதிலும் டெக்னாலஜி நிறைந்த இந்த நவீன உலகில் இது குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை.
வாடகைக்கு எடுக்கலாம்: பலரது காதலும் இங்கே தோல்வியில் முடிய இதுவே முக்கிய காரணமாகும். இதன் காரணமாகவே இப்போது பலரும் திருமணமாகாமலும் பெண் கிடைக்காமலும் இருந்து வருகின்றனர். நம்ம ஊரில் அரேஞ் மேரேஜ் முறையால் சிங்கிலாக சுற்றும் நபர்கள் குறைவாகவே உள்ளனர். இருப்பினும், வெளிநாடுகளில் இப்படி தனியாகச் சுற்றுபவர்கள் ரொம்பவே அதிகம். இந்த தனிமையால் இவர்களுக்கு மனஅழுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
பல பிரச்சினைகளுக்கு நவீன தீர்வை கொடுக்கும் ஜப்பான் தான் இதற்கும் ஒரு தீர்வைக் கொடுத்துள்ளது. நமது நாட்டை விட அங்கே வயதானாலும் சிங்கிளாக சுற்றும் நபர்கள் ரொம்பவே அதிகம். இதற்குத் தீர்வாக ஜப்பான் மக்கள் தங்கள் பார்ட்னர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம். காதலன், காதலி என யார் வேண்டும் என்றாலும் ஒரு மணி நேரத்திற்கு இத்தனை வாடகை எனச் செலுத்தி எடுத்துக் கொள்ளலாம்.
அரசின் திட்டம்: இதெல்லாம் ஒரு பிஸ்னஸா.. இதற்கு அந்நாட்டு அரசு தடை விதிக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஜப்பான் மக்கள் அதிகப்படியானோர் சிங்கிளாக இருப்பதால் அவர்களுக்குத் தனிமை உணர்வு அதிகரித்து மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறதாம். இதனால் விபரீத முடிவுகளையும் அவர்கள் எடுக்க நேரிடுகிறதாம். எனவே, அதைத் தடுக்க இந்தத் திட்டத்தை முன்மொழிந்ததே அரசின் குழு தானாம். எனவே, இது 100% அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்த திட்டம் தான்.
இதைக் கேட்டு உடனே குஷியாக வேண்டாம்.. இந்த சேவைக்கான கட்டணம் ஒன்றும் மலிவானது இல்லை.. காதலியை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.3000 என்ற விகிதத்தில் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு வாடகைக்கு எடுக்க வேண்டுமாம்.. இது தவிர கேர்ள் பிரண்டை தேர்வு செய்யத் தனியாக ரூ.1,200 கட்ட வேண்டுமாம். முதல் முறை இந்த சேவையைப் பயன்படுத்தும் போது இலவசமாக கேர்ள் பிரண்டை தேர்வு செய்யலாம். இருப்பினும், அதன் பிறகு தேர்வு செய்ய ரூ.1,200 கட்ட வேண்டும்.
என்ன ரூல்ஸ்: இது குறித்து வாடகை கேர்ள் பிரண்டாக இருக்கும் பெண் ஒருவர் கூறுகையில், “காதலிக்க முடியாதவர்கள்.. காதலிக்கத் தெரியாதவர்கள்.. ஒரு முறை கூட கேர்ள் பிரண்ட உடன் வெளியே செல்லாதவர்கள்.. அல்லது மிகவும் பிஸியாக இருப்பவர்கள் தான் இதன் மூலம் அதிகம் பயனடைவார்கள். வாடைக்கு எடுக்கும் போது சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது. நாங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளக் கூடாது. செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டும். டிப்ஸ் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை வாங்கக் கூடாது” என்றார்.
கேர்ள் பிரண்ட்கள் மட்டுமின்றி தேவைப்பட்டால் பாய் பிரண்ட்களை கூட வாடகைக்கு எடுக்க முடியுமாம். அதுவும் ஒரு மணி நேரத்திற்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி நாம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். என்ன இப்படியெல்லாம் திட்டத்தைக் கொண்டு வந்து இந்த ரேஞ்சுக்கு இறங்கிடீங்க என்று நெட்டிசன்கள் பலரும் இதற்குக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.