அகரம் பவுண்டேஷன் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான ‘ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளை’ யின் 44வது விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (16.07.2023) சென்னையில் நடைபெற்றது. நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் வரவேற்புரை வழங்கிய நடிகர் கார்த்தி, “நாம் இருக்கும் காலகட்டம் ரொம்ப நல்ல காலகட்டம். கல்வியின் முக்கியத்துவம் நிறைய பேருக்குத் தெரியுது. பெற்றோர்கள் 50 ரூபாய் சம்பாதிச்சாலும் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், 70 வருடத்திற்கு முன்னாடி அப்படி அல்ல. சரியான பள்ளிக்கூடம் கிடையாது. பள்ளிக்குச் செல்ல 3-4 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும். 10-ம் வகுப்பு வரைப் படித்தாலே பெரிய விஷயம்.
அந்த காலகட்டத்தில் ஒரு பையன் ‘கல்வி இருந்தா போதும். என் கல்விக்கு உதவுங்கள். அதற்காக நான் உங்களின் அடிமையாகக் கூட வேலை செய்கிறேன்’ என்றான் அந்தப் பையன். பிறகு, அந்தப் பையனின் மாமா மேற்படிப்பு படிக்க உதவி செய்தார். அப்போது அந்தப் பையன் எல்லாரும் இன்ஜினீயரிங் பயிலும் போது தனக்குப் பிடிச்ச ஓவியம் படிக்க சென்னை வந்தான். அந்தப் பையன்தான் சிவக்குமார். அவர் படிச்ச பிறகு அவரது தலைமுறையே நல்லா இருக்கு. ஒரே குடும்பமாகிய நாமெல்லாம் இப்போ நல்லா இருக்கோம். கல்வி போன்ற பெரிய செல்வம் எதுமே இல்லை. அதற்கு எங்கள் குடும்பம் ஓர் உதாரணம்.
அப்பாவின் 100வது திரைப்பட விழாவில் MGR சாரால் தொடங்கி வைக்கப்பட்டது தான் இந்த சிவகுமார் கல்வி அறக்கட்டளை. 25 வருடங்களுக்குப் பிறகு அகரம் கிட்ட கொடுத்தாங்க இப்போ இது 44வது வருடம். இத்தனை ஆண்டுகள் இந்த விழா நடப்பது பெரும் மகிழ்ச்சி.
மாணவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் நம்பிக்கையை என்றும் கைவிடக் கூடாது. படிப்பிலிருந்து உங்கள் கவனத்தை சிதறடிக்க இன்றைக்கு ஏகபட்ட விஷயங்கள் இருக்கு. கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு நிறைய திறமையிருக்கிறது. அவர்களுக்குத் தமிழ் மேல் அதிக ஆர்வமிருக்கிறது. அதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.