சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார்.
மாவீரன் திரைப்படம் ஜூலை 14 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் ஷங்கரின் மகள் அதிதி சங்கரும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அதிதி ஷங்கர்: தமிழ் சினிமாவில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவரது இரண்டாவது படமான மாவீரன் படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் வித்து அய்யன்னா, இசையமைப்பாளர் பரத் ஷங்கர் மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பாராட்டிய ஷங்கர்: இந்நிலையில் மாவீரன் படம் பார்த்த இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார் . அவர் தனது ட்வீட்டில் படக்குழுவினரை பாராட்டி உள்ளார். இயக்குனர் மடோன் அஷ்வினின் புத்திசாலித்தனம் மூலம் இந்த மாவீரன் கதையை சிறப்பாக அமைத்துள்ளார். கிளாசி மாஸ் என்டர்டெய்னர் மற்றும் திரைக்கதைக்குள் அற்புதமான நகைச்சுவை உணர்வு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பான படம்: சிவகார்த்திகேயன் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கினார். அதிதி கொடுத்ததை நன்றாக செய்தார். திருமதி சரிதா, யோகிபாபு மற்றும் மிஷ்கின் ஆகியோர் அற்புதமாக நடித்துள்ளனர். ஆக்சன் காட்சிகள், திரைக்கதை மற்றும் படம் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகள். இது ஒரு மகிழ்ச்சியான புதிய அனுபவம் என பதிவிட்டுள்ளார்.