இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி அறிமுகமான நாளில் இருந்து இப்போது வரை நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். களத்தில் இருக்கும் வரை இந்திய அணியின் வெற்றி என்பது சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியிருக்கும் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சியிருக்கிறார். அந்த பட்டியலில் இன்னொரு மகத்தான சாதனையை படைக்க இருக்கிறார் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களம் காணும் 2வது டெஸ்ட் போட்டி, அவர் இந்திய அணிக்காக விளையாடப்போகும் அனைத்து பார்மேட்டுகளையும் உள்ளடக்கிய 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இருக்கும். வரும் 20ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.
விராட் கோலி அறிமுகம்
விராட் கோலி 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 274 ஒருநாள் போட்டிகளிலும், 115 டி20 போட்டிகள் மற்றும் 110 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். அதில் 183 ரன்கள் என்ற அதிகபட்ச ரன்களுடன் ஒருநாள் போட்டியில் 12 ஆயிரத்து 898 ரன்கள் விளாசியுள்ளார். 46 சதங்களும் 65 அரைசதங்களும் அடித்துள்ளார். 107 ஓவர்கள் பந்து வீசி, 4 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
விராட் கோலி ரெக்கார்டு
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் 2010 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி களமிறங்கினார் விராட் கோலி. அதில், ஒரு சதம் 37 அரைசதங்கள் உட்பட 4008 ரன்கள் குவித்துள்ளார். டி20 போட்டியில் 25 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி அறிமுகமானார். அதிகபட்ச ஸ்கோர் 254 ரன்கள். இதில் இதுவரை 7 இரட்டைச் சதம், 28 சதமும், 29 அரைசதமும் விளாசியுள்ளார்.
500 போட்டிகள் விளையாடிய இந்திய வீரர்கள்
இந்திய அணிக்காக 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். அவர் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 9 வீரர்கள் இந்த பட்டியலில் இருக்கும் நிலையில் விராட் கோலி 10வதாக இணைய இருக்கிறார்.