1979ம் ஆண்டு நடிகர் சிவக்குமார் ‘ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளை’யை ஆரம்பித்தார். இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் பல மாணவ/மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான 44வது ஆண்டின் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா அகரம் பவுண்டேஷன் சார்பில் இன்று நடைபெற்றது. இதில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ/மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கினர். இவ்விழாவில் பேசிய சூர்யா, “மாணவர்களை பாராட்டி மகிழ்ச்சியோடு தன் உரையை தொடங்கினார், “ஒரு சிறு தொகையில் ஆரம்பித்து இப்போது 44 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வருகிறது இந்த அறக்கட்டளை.
இத்தனை ஆண்டுகளும் எல்லா மாவட்டங்களிலும் எந்த காரணங்களும் சொல்லாமல் மாணவர்கள் வந்து விழாவை சிறப்பித்து வருகிறார்கள். எல்லோருக்கும் சமூகப் பொறுப்பு , அக்கறை இருக்க வேண்டும். ஏன் மேடை போட்டு சொல்கிறோம் என்றால் இது ஒரு ‘butterfly effect’ போல நிறைய பேரைச் சென்றடையும். மேடை போட்டு சொல்லாமலும் நிறைய பேர் உதவி செய்து வருகிறார்கள். இங்கு இருக்கும் மாணவ மாணவிகள் பயணம் சாதாரணம் அல்ல… ரொம்ப அர்த்தமுள்ளதாக நான் பார்க்கிறேன்.
அகரம் மாணவர்கள் கல்லூரியில் சேரும் போது , எந்த பேராசிரியராக ஆக இருந்தாலும் , `அகரம் மாணவர்களின் தனித்தன்மையே வேற , Adaptability, leadership quality எல்லாமே இருக்கு!’ என்று பாராட்டுவார்கள். அகரம் வரும் மாணவர்கள் முக்கால் வாசி பேர் மாதம் 3000 ரூபாய் கூட தன் குடும்ப சூழலில் பார்த்து இருக்க மாட்டார்கள். நிறைய பேர் முதல் தலைமுறை மாணவர்கள். பெரும் மாற்றத்தை அகரம் ஏற்படுத்தி இருக்கு . அதற்கு மிக முக்கிய காரணம் அகரம் தன்னார்வலர்கள். ஒருவர் மாறினால் அந்த வீடு மாறும், சமுதாயம், சூழல் மாறும் அதற்கு மிக முக்கியமானது கல்வி.
மாணவர்கள், ‘கல்வி மூலமாக வாழ்கையைப் படியுங்கள். வாழ்கை மூலமாக கல்வியைப் படியுங்கள் வாழ்கை முழுக்க கல்வி ரொம்ப அவசியம்’. நம்மைச் சுற்றி சாதி , மதம் என்று நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. அதையெல்லாம் கடந்து சுற்றி இருக்கும் அறிவியலுக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் சமந்தத்தை சொல்லி தருவது கல்வி.
இதில் ஆசியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்று வருடமாக அகரம் அரசுடன் சேர்ந்து இயங்குகிறது. இந்த வருடம் 1 லட்சம் மாணவர்களை பள்ளி , கல்லூரிகளுக்கு வர வைக்க முடிகிறது. எல்லாருக்கும் சரியான சமமான கல்வி கொடுக்கணும் என்பது தான் எங்கள் நோக்கம். அரசுடன் இணைந்து பணியாற்றுவது அகரத்தின் கூடுதல் பெருமை. அகரம் தன்னிச்சையாக இயங்க தனி கட்டடம் உருவாகி வருகிறது. கூடிய விரைவில் அது திறக்கப்படும். அகரம் எங்களோடது மட்டும் கிடையாது இது உங்களோடது இது நம்மளோடது.” என்று நெகிழ்வாகத் தன் உரையை முடித்தார்.