'ஆக்ஷன்' படத்தில் நடிக்க நடிகை துஷாரா விஜயனுக்கு ஆசை!

சினிமாவில் 'போதை ஏறி புத்தி மாறி' எனும் படத்தின் வாயிலாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். கடந்த ஆண்டு 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். சமீபத்தில் வெளியான 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில், அவரது நடிப்பு பரவலான பாராட்டுகளை பெற்றது. தற்போது பிரபல இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவான 'அநீதி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தின் ஹீரோயினாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர் கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பேசுகையில், ''எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும். அது போல தான் எனக்கும். தேசிய விருது பெற்ற வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்கிற ஆசை, தற்போது நிறைவேறி உள்ளது. அவருடைய அனைத்து படங்களிலும், ஏதேனும் ஒரு கருத்து சொல்லும் வகையில் தான் இருக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படமாக அமையும். இந்த படத்தில் 'தனலட்சுமி' எனும் கதாப்பாத்திரத்தில், வெகுளித்தனமாக நடித்துள்ளேன். மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.

இதுவரை நான் நடித்த நடிகர்கள் அனைவரும் திறமைசாலிகள். அவர்களுடன் நடிக்கும் போது போட்டி, போட்டு அவர்களுக்கு இணையாக நடிப்பேன். என்னுடைய அடுத்த படத்திற்கு கதை கேட்டு வருகிறேன். இன்னும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவில்லை. வரும் நாட்களில் 'ஆக்ஷன்' படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.