சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து தன்னுடைய அறிமுகப்படமான போடா போடியில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார்.
சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்த வரலட்சுமி, விஜய், விஷால் ஆகியோருக்கு வில்லியாக நடித்து அதிரடி காட்டியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
50 படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார்: நடிகை வரலட்சுமி சரத்குமார் சிம்பு -விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான போடா போடி என்ற படத்தின்மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துவிட்டார் வரலட்சுமி. தொடர்ந்து பல படங்களில் இவர் போல்டாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னதாக வரலட்சுமியை அவரது அப்பா சரத்குமார் நடிக்கவே அனுமதிக்கவில்லையாம். தொடர்ந்து சிம்புவுடன் நடிக்க அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக மும்பையில் உள்ள அனுபம் கெர் நடிப்புப் பள்ளியில் இவர் பயின்றுள்ளார். அப்போது அவருக்கு ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் படிப்பை முடித்துவிட்டுதான் நடிப்பிற்குள் வரவேண்டும் என அவரது தந்தை கூறிவிட்டதால் அந்த படத்தின் வாய்ப்பை தான் ஏற்க முடியவில்லை என்றும் வரலட்சுமி கூறியுள்ளார். இதேபோல வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் ஏற்க முடியாமல் போனதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சிம்புவுடன் போடா போடி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தெடர்ந்து சில படங்களில் நடித்து தமிழில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார் வரலட்சுமி. தொடர்ந்து வில்லியாகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். விஜய்யின் சர்க்கார், விஷாலின் சண்டக்கோழி 2 போன்ற படங்களில் மிரட்டலான வில்லியாக நடித்திருந்தார். குறிப்பாக சர்க்கார் படத்தில் இவரது கேரக்டர் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

தொடர்ந்து பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை, மாரி 2, விக்ரம் வேதா என அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, தெலுங்கு உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 38 வயதான வரலட்சுமி சரத்குமார், இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. மாறாக தன்னுடைய திரைப்பயணத்திலும், குடும்பத்தினருடன் நேரம் செலவிழிப்பதிலும் அதிகமாக விருப்பம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் 50 படங்களை முடித்துள்ளதற்கு ஆசிர்வதிக்கப்பட்டதாக கூறியுள்ள அவர், இதற்கான தன்னுடைய பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய டீமிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் என்றும் கூறியுள்ளார். இன்னும் அதிகமான ஆண்டுகள், அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்றும் ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.