ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க நடவடிக்கை தேவை- பயிற்சியாளர் வேண்டுகோள்

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க அனுமதி அளிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கால்பந்து அணிக்கு சிக்கல்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி, தடகளம், கபடி, கிரிக்கெட், கால்பந்து உள்பட 40 வகையான போட்டிகள் அரங்கேறுகின்றன.

இந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கு 23 வயதுக்கு உட்பட்ட இந்திய கால்பந்து அணியை, சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் மேற்பார்வையில் அனுப்ப இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்து தயாராகி வருகிறது.

மத்திய விளையாட்டு அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறையின்படி குழு போட்டியை பொறுத்தமட்டில் ஆசிய மண்டல தரவரிசையில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகள் தான் ஆசிய விளையாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்திய கால்பந்து அணி தரவரிசைப்பட்டியலில் 18-வது இடத்தில் இருக்கிறது. இதனால் இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பயிற்சியாளர் வேண்டுகோள்

இந்த நிலையில் இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் (குரோஷியா), ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2017-ம் ஆண்டு நடந்த 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை போட்டியில் நன்றாக செயல்பட்ட நமது அணி 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியிலும் சிறப்பாக விளையாடியது. இது மிகவும் திறமை வாய்ந்த அணியாகும். தற்போது நமது அந்த திறமையான அணியின் ஆசிய விளையாட்டு வாய்ப்பு பறிக்கபட்டு இருக்கிறது என்பதை உங்களது கவனத்துக்கு உடனடியாக கொண்டு வர விரும்புகிறேன்.

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க நமது அணி உண்மையிலேயே தகுதி வாய்ந்ததாகும். ஆனால் தரவரிசையை காரணம் காட்டி சொந்த விளையாட்டு அமைச்சகமே அனுமதி மறுத்து இருப்பது நியாயமற்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கும் மற்ற அணிகளை விட நமது கால்பந்து அணியின் தரவரிசை நன்றாக இருக்கிறது. தரவரிசையில் பின்தங்கி இருக்கும் அணிகள் கூட தரவரிசையில் முன்னிலை வகிக்கும் அணிகளை வீழ்த்தும் வாய்ப்பு கால்பந்து போட்டியில் உண்டு என்பதற்கு வரலாறும், புள்ளி விவரங்களும் சான்றாக உள்ளன.

உலக கோப்பை போட்டிக்கு…

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை போட்டியை இந்தியா 2017-ம் ஆண்டு நடத்தியது. அத்துடன் மிகச்சிறந்த புதிய தலைமுறை வீரர்களை உருவாக்குவதில் அதிக முதலீடு செய்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி ஒருநாள் விளையாட வேண்டும் என்ற கனவை நீங்கள் எப்போதும் ஆதரித்தீர்கள். இதுவரை எங்களுக்கு கிடைத்தது போன்று உங்களது ஆதரவு தொடர்ந்து கிட்டுமானால், பெருமை வாய்ந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் கனவை எட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.

நாங்கள் ஒரு தேசிய அணியாக கடந்த 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து சில சிறப்பான முடிவுகளை பெற்றுள்ளோம். அனைத்து தரப்பினரிடமும் இருந்து ஆதரவு கிடைத்தால் மேலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.

சமீபத்திய உங்களது பிரான்ஸ் பயணத்தில் கால்பந்து மற்றும் வீரர் எம்பாப்பே குறித்து நீங்கள் பேசியது இந்திய கால்பந்தின் வருங்காலம் வளமாக இருக்க வேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்தையும் தொட்டது. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கால்பந்து சமூகத்தினர் சார்பில் நான் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அவர் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் பெரும்பாலும் 23 வயதுக்கு உட்பட்ட வீரர்களே இடம் பெற முடியும். 23 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 பேரை அனுமதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.