சோனியா, ராகுல் சென்ற விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கம்… காங்கிரஸ் தொண்டர்கள் பதற்றம்!

காங்கிரஸ்
தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத் பவார், உத்தவ் தாக்கரே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய கூட்டம் இன்று மாலை நிறைவு பெற்றது.

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி

இந்த இரண்டு நாட்களில் பாஜகவை வீழ்த்த வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசித்தனர். அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சலுக்கும் தயாராகினர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு “இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி” (Indian National Democratic Inclusive Alliance) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இதன் சுருக்கம் ”இந்தியா” (I.N.D.I.A) என வருவதால் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியில் தற்போது 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பல கட்சிகள் விரைவில் கைகோர்க்கும் என நம்பப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

விமானம் மூலம் புறப்பட்ட சோனியா, ராகுல்

இந்நிலையில் கூட்டம் முடிவடைந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மோசமான வானிலை நிலவியது. இதனால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாத சூழல் காணப்பட்டது.

போபாலில் அவசரமாக தரையிறக்கம்

உடனே மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த தகவலை போபால் போலீசார் உறுதி செய்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்து காங்கிரஸ் கட்சியினர் பெரும் பதற்றத்திற்கு ஆளாகினர். அதேசமயம் இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தொண்டர்கள் பெருமூச்சு

இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வானிலை இயல்பு நிலை திரும்பும் வரை காத்திருப்பார்களா? மீண்டும் எப்போது விமானம் மூலம் புறப்பட்டு செல்வார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டமும், தங்கள் கூட்டணிக்கு வைத்த பெயரும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ராகுல் காந்தி பெங்களூருவில் பேச்சு

பெங்களூரு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய ராகுல் காந்தி, இனி சண்டை என்பது இந்தியாவிற்கும், என்.டி.ஏவிற்கும் (NDA) இடையில் தான். இந்தியாவின் சித்தாந்தம் பாஜகவின் சித்தாந்தத்தால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியாவை பாதுகாப்பதே எங்களின் நோக்கம்.

இந்தியாவின் சித்தாந்தம்

நீங்கள் ஒருமுறை வரலாற்றை திரும்பி பார்த்தால், யாருமே இந்தியாவின் சித்தாந்தத்துடன் மோதி பார்த்ததில்லை. ஆனால் தற்போது அப்படி ஒரு நிலை வந்திருக்கிறது. மோடியின் சித்தாந்தாமா? இந்தியாவின் சித்தாந்தமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.