அஜித்தின் `விடா முயற்சி’யின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்கிறார்கள். அ.வினோத்தின் `துணிவு’ படத்திற்குப் பின், மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர் `விடா முயற்சி’. இந்த ஜூலை மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை.
அஜித்தின் 62வது படத்திற்கு ‘விடா முயற்சி’ என்று டைட்டில் வைத்து ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு படம் குறித்த எந்த அப்டேட்டும் வரவில்லை. அஜித்தைத் தவிர வேறு யாருக்கும் ஷூட்டிங் குறித்த அப்டேட் தெரியாது என்பதே உண்மை நிலை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதற்கிடையே கோடம்பாக்கத்தில் சிலரிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இது.

“அஜித் சில வாரங்களாகவே ஐரோப்பிய சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்கிடையே அஜித்திடம் வீடியோ காலில் இயக்குநர் மகிழ்திருமேனி படத்தின் கதையைச் சொல்லிவிட்டார் என்றும், கதையைக் கேட்ட அஜித் இயக்குநர் மகிழிடம் தினமும் அது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் பரவுகின்றன. ஆனால், ஆச்சரியமான ஒரு விஷயம், படத்தின் கதை இன்னமும் ரெடியாகவில்லை என்பதுதான்.
அஜித் லண்டன் செல்வதற்கு முன்னர் கேட்ட ஒன்லைனும், சில சீன்களும் அவருக்கு அப்போது திருப்தியாக இருந்தது. ஆனால், அதன் பின்னர், முழுக்கதையும் ரெடியான பிறகு அஜித் சில திருத்தங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் பல சீன்கள் அவருக்குத் திருப்தியில்லாமல் போனதால், மகிழ் வேறொரு லைனைச் சொன்னதாகவும், அதுதான் இப்போது வேக வேகமாக ரெடியாகிவருகிறது என்றும் சொல்கிறார்கள்.
அஜித், இம்மாதம் சென்னை திரும்புவதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால், கதை ரெடியாக இன்னும் ஒரு சில வாரங்கள் பிடிக்கும் என்பதால் அஜித் இன்னொரு டூர் அடிக்கும் ஐடியாவில் இருக்கிறார் என்கிறார்கள். விஷயம் இப்படியிருக்க, எப்படி இருந்தாலும் ஆகஸ்ட்டில் படத்தைத் தொடங்கிவிடவேண்டும் என்பதில் தயாரிப்புத் தரப்பினர் உறுதியாக இருக்கிறார்கள்.

அஜித்திற்குப் படத்தின் ஒன்லைன் தெரியும் என்பதால், அந்தக் கதாபாத்திரத்திற்காக லண்டனில் வெளிநாட்டு ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் அவர் தன் உடல் எடையை இன்னமும் குறைத்து ஸ்லிம் ஆகிவருகிறார். எனவே ‘விடா முயற்சி’யில் ஒரு புது அஜித்தை எதிர்பார்க்கலாம். அவரது ஃபேவரைட் ஸ்பாட்டான ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பைத் தொடங்கவும் வேலைகள் நடந்துவருகின்றன.
இதற்கிடையே லைகாவின் ரெய்டு பிரச்னைகளால்தான் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் என்ற தகவலைத் தயாரிப்பு வட்டாரம் மறுக்கிறது. எல்லாப் பிரச்னைகளையும் அவர்கள் சரி செய்துவிட்டனர். அதனால்தான் மலையாளத்தில் ஜூடு ஆண்டனி படத்தைத் தொடங்கினார்கள். அதன் படப்பிடிப்பு தற்போது சுமுகமாக நடந்துவருகிறது. எனவே கதை ரெடியானதும், அஜித் பறந்து வந்துவிடுவார் என்கிறார்கள்.