புதுடெல்லி: காதலருடன் டெல்லிக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சீமா குலாம் ஹைதரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர் சீமா ஹைதர் (27). இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கரோனா பெருந்தொற்று காலத்தில் சீமா ஹைதர், ஆன்-லைனில் பப்ஜி விளையாட்டை விளையாடி வந்தார். அப்போது தலைநகர் டெல்லி அருகேயுள்ள உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் (22) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகவே சமூக வலைதளம் வாயிலாக காதலித்து வந்தனர். அவ்வப்போது நேபாளத்தில் இருவரும் நேரில் சந்தித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து காதலருடன் இந்தியாவில் நிரந்தரமாக தங்க முடிவு செய்த சீமா ஹைதர், முதல் கணவரை பிரிந்து கடந்த மே மாதம் நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தார். டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள சச்சினின் வீட்டில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அவர் வசித்து வந்தார். அவர் குறித்து சந்தேகம் எழுந்ததால் அப்பகுதி மக்கள் போலீஸில் தகவல் தெரிவித்தனர். போலீஸார் தேடுவதை அறிந்ததும் சச்சினும், சீமா ஹைதரும் ஹரியாணாவுக்கு தப்பிச் சென்றனர். இந்நிலையில் கிரேட்டர் நொய்டா போலீஸாரால், சச்சினும், சீமா ஹைதரும் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டனர். சீமா ஹைதருக்கு தஞ்சம் அளித்த சச்சினின் தந்தை நேத்ரா பாலும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து கிரேட்டர் நொய்டாவிலுள்ள வீட்டிலேயே தங்கியிருந்தனர்.
இந்நிலையில் டெல்லிக்கு காதலர் சச்சினுடன் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் சீமா ஹைதரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, இந்தியாவுக்கு பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகள் உதவியுடன் சீமா ஹைதர் வந்தாரா என்பது குறித்தும் உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீமா, அவரது 4 குழந்தைகள் ஆகியோரின் பாஸ்போர்ட்கள், செல்போன்களை போலீஸார் ஏற்கெனவே பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ ஆகியவற்றுடன் அவருக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சீமாவின் செல்போனில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த செல்போன்களை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீமாவின் அண்ணன், மாமா ஆகியோர் பாகிஸ் தான் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த கோணத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.