2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டு தொடரை நடத்தும் உரிமையை அகமதாபாத் ஏலம் எடுக்க உள்ளதாகத் திட்டம்…..

அகமதாபாத்,

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் மட்டும் இந்த போட்டி ரத்தானது. மற்றபடி தங்குதடையின்றி நடந்து வருகிறது.

கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அரங்கேறியது. இதில் 72 நாடுகளைச் சேர்ந்த 5,054 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 20 வகையான விளையாட்டுகளும், 9 வகையான பாரா போட்டிகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு நேற்று தடாலடியாக அறிவித்தது. போட்டியை நடத்த தாங்கள் மதிப்பிட்ட பட்ஜெட்டை விட தற்போது அதிக தொகை பிடிக்கும் என்று தெரியவந்து இருப்பதால் இந்த கடினமான முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசின் திடீர் அறிவிப்பால் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு திட்டமிடப்படி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடரை நடத்தும் உரிமையை அகமதாபாத் ஏலம் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் அரசு 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் ஒப்பந்தத்தைப் பெற முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு முன்னேற்பாடாக அங்கு உள்ள நரேந்திர மோடி மைதானத்தை உலகத்தரம் வாய்ந்த வகையில் தீவிரமாகத் தயார் செய்து வருகிறது. மைதானத்தை உலகத்தரம் வாய்ந்த வகையில் உயர்த்தும் பணி 2028 -ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதலில் அங்கு 2030-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி நடத்தும் உரிமையைப் பெற முடிவு எடுத்திருந்தது. ஆனால் மைதானத்தை மேம்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று முடிவடையும் தறுவாயில் உள்ளது. மைதானத்தை உலகத்தரம் வாய்ந்த வகையில் உயர்த்தும் பணி 2026-ம் ஆண்டிற்குள் முடிவடையும் என்று தெரிகிறது.

இந்நிலையில் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு நேற்று அறிவித்த நிலையில் காமன்வெல்த் தொடரை நடத்தும் உரிமையை குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏலம் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.