அரியலூர் – நாமக்கல் ரயில் பாதை: பெரம்பலூர் தொகுதியை கைப்பற்ற செம திட்டம்!

அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய ரயில்வே துறைக்கு பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் கடிதம் எழுதியிருந்தார். அதில் ரயில் பாதை இல்லாததால் பெரம்பலூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள் என்றும், இத்திட்டம் கொண்டு வரப்பட்டால் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தும் இது தொடர்பாக மனு அளித்தார். அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் வரை 108 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே பாதை அமைப்பதற்காக கள ஆய்வு நடத்தப்பட்ட போதும் திட்டம் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த போதும் பெரம்பலூர் பகுதிக்கு ரயில் பாதை இல்லாதது அம்மாவட்ட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்று பாரிவேந்தர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினார்.

தற்போது அரியலூர் – நாமக்கல் ரயில் பாதை திட்டம் தொடர்பாக பாரிவேந்தருக்கு இந்திய ரயில்வே துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், “அரியலூர் – நாமக்கல் இடையே பெரம்பலூர், துறையூர், தலையங்கார்பேட்டை வழியாக 116.26 கி.மீ. புதிய ரயில் பாதைக்கான இறுதி கட்ட ஆய்வு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் முடிவுகள் சாதகமாக வரும் போது அடுத்தகட்ட பணிகள் குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரயில்வே நடை மேம்பாலம் நடவடிக்கை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

இந்த திட்டம் நிறைவேறும் போது பெரம்பபூர் மக்களின் நீண்ட கால கனவு நனவாகும். அதேசமயம் இதன் பின்னணி குறித்தும் சில தகவல்கள் வருகின்றன. 2019 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாரிவேந்தர். வெற்றி பெற்ற பின்னர் திமுகவுடன் அவர் அவ்வளவு இணக்கமாக இல்லை. பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்.

2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்துக்கு பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாரிவேந்தரும் டெல்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதிமுக-பாஜக கூட்டணியில் இணையும் அவருக்கு மீண்டும் பெரம்பலூர் தொகுதியை ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

அங்கு மக்களின் வாக்குகளைப் பெறவேண்டுமானால் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்றுவருவது களத்தில் தங்களுக்கு ஆதரவான சூழல் உருவாகும் என பாஜக கணக்கு போடுவதாக கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.