சென்னை: ஏற்கனவே பீஸ்ட் படத்துக்கு ஆடியோ வெளியீட்டு விழா நடக்காமல் ரசிகர்கள் கொந்தளித்த நிலையில் தான் வாரிசு படத்துக்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், லியோ படத்துக்கு ஆடியோ வெளியீட்டு விழா கிடையாது என்கிற தகவல் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக லியோ படம் உருவாகி வருகிறது.
அக்டோபர் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில், செப்டம்பர் மாதம் சென்னையில் அல்லாமல் கோவை அல்லது மதுரை உள்ளிட்ட இடங்களில் இசை வெளியீட்டு விழா நடக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.
லியோ செகண்ட் சிங்கிளே இல்லை: இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவரிடம் லியோ செகண்ட் சிங்கிளை ரசிகர்கள் கேட்க, லியோ செகண்ட் சிங்கிளே கிடையாது என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருந்தார்.

லியோ திரைப்படத்தில் “நா ரெடி தான் வரவா” பாட்டு மட்டுமே தான் இருக்கும் என்றும் இந்த படம் கைதி படம் போல விறுவிறுப்பாக காட்சிகளை மட்டுமே கொண்டு நகரும் என்றும் கூறியுள்ளார்.
ஆடியோ லாஞ்ச் எப்படி?: ஒரே ஒரு பாட்டை வைத்துக் கொண்டு ஆடியோ லாஞ்ச் நடத்த முடியுமா என்கிற கேள்வி தற்போது கோலிவுட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஆடியோ லாஞ்ச் இல்லைன்னா என்னங்க டிரெய்லர் லாஞ்ச் விழாவாக பண்ணிடலாம் என படக்குழு லியோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்போதும் போல இந்த முறையும் நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி, “என் நெஞ்சில் குடியிருக்கும்” பேச்சு மிஸ் ஆகாது என தயாரிப்பு தரப்பு உறுதியளித்துள்ளது. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு விஜய்க்கு அழைப்பு விடுக்க ஒரு பக்கம் முயற்சி நடைபெறுவதாகவும், லியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு ரஜினியை அழைக்க படக்குழு முயற்சிப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், மார்க்கெட்டில் இருவரும் போட்டி நடிகர்களாக வலம் வருவதால், நிச்சயம் ஒரே மேடையில் இருவரையும் இப்போதைக்கு பார்க்க முடியாது என்றே தெரிகிறது. மேலும், ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் காஸ்டிங்கும், அதே போல லியோ படத்தில் இயக்குநர்களின் சங்கமமும் பேசினாலே அந்த இரு பிரம்மாண்டமான விழாவும் அதிக நேரத்தை எளிதில் ஆட்கொண்டு விடும் என்கின்றனர்.