விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்று மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில். இங்கு, ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 2,51,001 வளையல்களைக் கொண்டு பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்ட அங்காளம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

மேலும், ஐந்து வகையான உணவுகள், பலகாரங்கள், சந்தனம், மஞ்சள் ஆகியவை கொண்டு அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை மனமுருக தரிசனம் செய்து சென்றனர். ஆடிப்பூரம் திருவிழா நிறைவு பெற்றதும், அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்ட வளையல்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.