இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து ICC Women’s Championship தொடர் சார்பாக மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டன. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்திருந்தன. இதனால் 3வது ஒருநாள் போட்டி முக்கியமான இறுதிப் போட்டி போல மாறியது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தப் போட்டி சமனில் முடிந்துவிட்டது. இரு அணிகளும் தொடரைக் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில், அம்பயர் அவுட் கொடுத்த போது களத்திலேயே அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஸ்டம்ப்பை பேட்டால் அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில், இந்திய அணியின் துணைக்கேப்டனான ஸ்மிருதி மந்தனாவிடம் இந்தச் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இதற்குப் பதிலளித்த அவர், “இரு அணிகளும் மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். போட்டியின் நடுவே நடந்த இந்தச் சம்பவம் விளையாட்டின் ஒரு பகுதி.

ஆண்கள் கிரிக்கெட்டிலும் இது போன்ற சம்பவங்களை அதிகம் பார்த்திருப்போம். எனவே பெண்கள் கிரிக்கெட்டிலும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சாதாரண ஒரு விஷயம்தான். ஹர்மனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். வெற்றி பெற வேண்டும் என்று விரும்புபவர். விளையாட்டின் உத்வேகத்தை மனதில் வைத்து இவ்வாறு செய்வது சிறந்த விஷயம் அல்ல. ஆனால் அந்தத் தருணத்தில் ஏதோ ஒரு கோபத்தில் அவ்வாறு செய்துவிட்டார். இந்தியாவிற்காக வெல்ல விரும்பினால் இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்தான்” என்று மந்தனா கூறியிருக்கிறார்.