குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாம் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. வழக்கம்போல் சிறப்பாக ஆடிய விராட் கோலி 29-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். சிறப்பாக ஆடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 57 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும் அடித்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் ஜடேஜா 61 ரன்கள் எடுக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்கள் அடித்து கீழ் அணிக்கு நங்கூரத்தை பாய்ச்சினர். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் பெரிய ஸ்கோர் குவிக்கவில்லை.
இரண்டாவது களமிறங்கிய இஷான் கிஷன் 37 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரின் அவுட்டை இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர்கான் விமர்சித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, அதற்கான பேட்டிங் அணுகுமுறையோடு விளையாட வேண்டும், ஆனால் இஷான் கிஷனின் பேட்டிங் பார்க்கும்போது அவர் இன்னும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து வெளியே வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என சாடியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இஷான் கிஷன் இரண்டாவது டெஸ்டில் நன்றாக பேட்டிங் துவங்கினார். ஆனால் அவர் ஆட்டம் இழந்த விதம் சற்றும் ஏற்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்துவிட்டால் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் 20-30 பந்துகள் பிடித்துவிட்டு இப்படி தவறான ஷார்ட் விளையாடி ஆட்டம் இழப்பது ஏற்க முடியாதது. இஷான் கிஷன் டி20 மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும். இப்படி நன்றாக துவக்கம் கிடைத்த பிறகு தவறான ஷார்ட் விளையாடுவது என்பது அவரது அடுத்தடுத்த போட்டிகளிலும் பாதிப்பை உண்டாக்கும். அந்த மனநிலையை தவிர்க்க வேண்டும். இது டி20 பாதிப்பினால் வருவது. அதை விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.