குவஹாத்தி: மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இன மக்கள் வெளியேற்றப்படுவதால் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மிசோ இனமக்கள் வெளியேற வேண்டும் என அம்மாநில மாணவர் அமைப்பு கெடு விதித்திருப்பது வடகிழக்கு மாநிலங்களில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதல்கள் 3 மாதங்களாக நீடிக்கிறது. குக்கி இன மக்கள், மிசோரம் மாநிலத்தின் மிசோ இன மக்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். இதனால் குக்கி இனக்குழுவினர் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இன மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அம்மாநில முன்னாள் ஆயுதக் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இன மக்கள் வெளியேறி அஸ்ஸாம் மாநிலத்தில் அடைக்கலம் புகுந்தனர். தற்போது மிசோரம் மாநிலத்தின் நடவடிக்கைக்கு பதில் தரும் வகையில் அஸ்ஸாம் மணிப்பூர் மாணவர் ஒன்றியம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், மிசோரம் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் மைத்தேயி மக்கள், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சென்றவர்கள். இதற்கு பதில் தரும் வகையில் அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மிசோ இன மக்கள் உடனடியாக அஸ்ஸாமை விட்டு வெளியேறி மிசோரம் செல்ல வேண்டும். மிசோ மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என அந்த மாணவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா வெளியிட்ட ஒரு கருத்து இன்னொரு விவகாரமாக உருவெடுத்தும் உள்ளது. மணிப்பூரில் குக்கி இனக்குழுவினருக்கு தனி நிர்வாக கவுன்சில் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மிசோரம் மாநில அரசு ஆதரிக்கும் என கூறியுள்ளார். ஆனால் மணிப்பூரில் இப்போது குக்கி இனக்குழுவினருக்கு தனி நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டால் அது பின்னர் மிசோரம் மாநில அரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டு அகன்ற மிசோரம் மாநிலமாக உருவெடுக்கும் நிலைமை உருவாகும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.