`காசு பார்க்கத்தான் 'டிசிசி' பணியாளர்களா?' – சர்ச்சையில் அரசு போக்குவரத்து கழகங்கள்!

தமிழக போக்குவரத்துத்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்திருக்கும் அரசாணையில், “கும்பகோணம் (291), சேலம் (423), கோவை (60), மதுரை (272), திருநெல்வேலி (376) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 1,422 நடத்துநர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

பணீந்திர ரெட்டி!

இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர், போக்குவரத்து துறையின் மூத்த நிதி அலுவலர் ஆகியோருடன் நிதித்துறைச் செயலர் நடத்திய கூட்டத்தில், கும்பகோணம், சேலம், கோவை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 60%, மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 50% நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதேநேரம், ஓட்டுநர், நடத்துநர் பிரிவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இதில் யாராவது ஒருவர் விடுப்பு எடுத்துக் கொண்டாலும், பேருந்துகளை இயக்க முடியாத சூழல் இருக்கிறது. எனவே, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளதைப் போல ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களை நியமிப்பதன் மூலம் பேருந்துகளை சீராக இயக்க முடியும்.

அரசாணை

ஏராளமான காலிப்பணியிடங்களை டிசிசி பணியாளர்களை தேர்வு செய்வதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களால் சமாளிக்கவும் முடியும். எனவே, இதர போக்குவரத்துக் கழகங்களிலும் டிசிசி பணியாளர்களை நியமிக்கலாம் என கடந்த ஆண்டு தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற செயலாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எனவே, விரைவு போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றைத் தவிர்த்து கும்பகோணம் (174), சேலம் (254), கோவை (60), மதுரை (136), திருநெல்வேலி (188) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 812 டிசிசி காலிப்பிணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மேலாண் இயக்குநர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அரசு பேருந்து

அதன்படி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், நாளிதழ்களில் விளம்பரம் செய்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக இணையவழியில் விண்ணப்பங்களைப் பெற வேண்டும். அதே நேரம், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாகவும் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியலை பெற வேண்டும். தேர்வு பணிகளுக்கு சாலை போக்குவரத்து நிறுவனத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழில் எழுதவும், வாசிக்கவும் தெரிய வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (18 மாத அனுபவம்), நடத்துநர் உரிமம் போன்றவை வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அடிப்படை மாத ஊதியம் ரூ.17,700 முதல் ரூ.56,200 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு பேருந்து

இவ்வாறு ஓட்டுநரையே, நடத்துனராக பயன்படுத்திக்கொள்ளும் அரசின் முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மாநில பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், “தற்போது வெளியிட்டிருக்கும் அரசாணையில், `காலியாக இருக்கும் 1422 பணியிடங்களில் 812 நடத்துனர்களை மட்டும் தேர்வு செய்தால் போதும்’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே கடந்த பிப்ரவரியில் வெளியிட்ட அரசாணையில், `அரசு விரைவு போக்குவரத்து கழகம், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 1,697 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், அதில் 707 பேரை தேர்வு செய்தால் போதும்” என தெரிவித்திருந்தார்கள். 50% காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டும் போதும் என்று அரசு நினைப்பது இதன் மூலம் தெரிகிறது. பெரும்பாலான பேருந்துகள் இரண்டு ஷிபிட்டுகளாக இயக்குகிறது.

ஆறுமுக நயினார்

இந்த பேருந்துகளுக்கு தலா இரண்டு நடத்துனர், இரண்டு ஓட்டுநர் தேவை. சில பேருந்துகள் 3 ஷிபிட்டுகளாக இயக்கப்படுகிறது. அவற்றுக்கு தலா மூன்று நடத்துனர், மூன்று ஓட்டுநர் தேவை. இதன்படி ஒரு பேருந்துக்கு 2.625 ஓட்டுநர், 2.625 நடத்துனர் என 5.5 பேர் தேர்வு செய்ய வேண்டும். 100 பேருந்துகள் இருக்கிறது என்றால், 550 பணியாளர்கள் இருக்க வேண்டும்.

பாதி பணியிடங்களை மட்டும் நிரப்புவோம் என்றால், மீதம் இருக்கும் பேருந்துகளை யார் இயக்குவது?. எனவே இது மிகவும் தவறான நடவடிக்கை. இதிலும் நடத்துனர்களையே ஓட்டுநர்களாகவும் பயன்படுத்துவோம் என்று கூறுகிறார்கள். டிக்கெட் கொடுப்பது மட்டும் நடத்துனரின் வேலை இல்லை. விபத்துக்கள் ஏற்படாமல் பேருந்துகளை இயக்க ஓட்டுநருக்கு உதவி செய்ய வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி

விபத்து, பழுது ஏற்படும் போது ஒரு ஓட்டுநரால் எதுவும் செய்ய முடியாது. 8-ம் வகுப்பு படித்தால் ஓட்டுநராக பணிக்கு சேரலாம் என்ற விதி இருக்கிறது. நடத்துனர் லைசன்ஸ் வாங்க வேண்டும் என்றால் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இவர்களின் புதிய விதிமுறைப்படி நடத்துனர் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் தான் டிரைவர் வேலைக்கு வர முடியும் என்றால் 10-ம் வகுப்பு படித்தவர்கள் தான் பணிக்கு வர முடியும்.

இதனால் படிக்க வாய்ப்பில்லாமல் டிரைவர் வேலைக்கு வருவோரின் வாய்ப்பு பறிக்கப்படும். எனவே இது நியாயம் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக நடத்துனர் லைசன்ஸ் கொடுக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கை மேலும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த அரசாணை போக்குவரத்துத்துறையை அழிக்கும் வகையிலான நடவடிக்கை.

சென்னை உயர் நீதிமன்றம்

ஏற்கெனவே நீதிமன்றம் ஓட்டுநர், நடத்துனர்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக தான் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு டிஎன்பிஎஸ்சி, “நாங்கள் நடத்துனர்கள், தொழிநுட்ப பணியாளர்களை வேண்டுமானால் எடுத்து தருகிறோம். ஏனெனில், அவர்களுக்கு தான் தேர்வு வைக்க முடியும். டிரைவர்களை தேர்வு செய்வதற்கான வசதி எங்களிடம் இல்லை. எனவே போக்குவரத்துக்கழகமே தேர்வு செய்து கொள்ளலாம்” என்று கூறிவிட்டது.

இப்போது நடத்துனருக்கான பணியை ஓட்டுனரே மேற்கொள்ளும் வகையில் பணியாளர்களை தேர்வு செய்வதால், அதை போக்குவரத்து கழகங்களே செய்யும். இதன் மூலம் அரசியல் வாதிகள் காசு சம்பாதிக்க முடியும். எனவேதான் இந்த நடவடிக்கை” என்று கொதித்தார்.

பின்னர் இதுகுறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம். “தேவைப்படும் இடங்களில் இரண்டு பேர் பணியில் இருப்பார்கள். தற்போது தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு இரண்டு தகுதிகளும் இருந்தால் அது கூடுதல் தகுதி என்று தான் கூறப்பட்டிருக்கிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

எனவே தொழிற்சங்கங்கள் கவலைப்பட தேவையில்லை. நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் தலைவர் கவனமாக இருக்கிறார். அதனால் தான் தமிழில் தேர்வு நடத்துகிறோம். பணம் விளையாடுகிறது என்று கூறினால் தேர்வு ஏன் நடத்த வேண்டும். மதிப்பெண்ணை தெரிவித்து தானே ஆக வேண்டும். எனவே தொழிற்சங்கங்கள் கூறும் புகாரை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.