மதுரை: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிள்ளிப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “பிள்ளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பிப்.15-ல் உடற்கல்வி ஆசிரியருடன் சென்றனர்.
போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்க இறங்கி உள்ளனர். அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.
அவர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளது. இந்த சம்பவத்துக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் தான் காரணம். விளையாட்டுப் போட்டிக்கு சென்ற மாணவர்களைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஆசிரியர்களின் கடமையாகும். மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விட்டு அப்படியே விட்டுவிட்டனர். பள்ளி மாணவிகளின் மரணத்துக்கு நியாயமான மற்றும் முறையான விசாரணை இல்லை. எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது அஜாக்கிரதையால் ஏற்பட்ட மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், “உயிரிழந்த மாணவிகளுடன் சென்ற 11 மாணவிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும். இதனால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதி, 4 மாணவிகள் உயிரிழந்த வழக்கின் விசாரணையை புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.