அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அவர் வசம் இருந்த மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி வசம் வந்த பிறகு டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே டாஸ்மாக் எலைட் கடைகளில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு இறக்குமதி சரக்குகளுக்கான விலை 20 ரூபாய் முதல் 320 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது
அதனை தொடர்ந்து மது பாட்டில்களை டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டில் விலை பட்டியலை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மதுவிற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் இல்லை என்ற அவர், மதுவுக்கு அடிமையானவர்களை அதில் இருந்து அவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது என்றும் புதிதாக மது அருந்த வரும் இளம் வயதினருக்கு கவுன்சிலிங் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். கவுன்சிலிங் அளிப்பது தொடர்பாக ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
மது பாட்டில்களை விளைநிலங்களில் வீசுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறிய அமைச்சர் முத்துசாமி, இதற்கு மாற்றாக டெட்ரா பேக் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவற்றை பார்த்துவிட்டு அதில் எது சிறந்ததோ அதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.