ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இன்றி பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்பதால் ஓட்டுநர்களும், அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கடந்த 1985-ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் 16 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழகம் சார்பில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 46 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி, மதுரை, சென்னை, சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், திருச்செந்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு 50க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுதவிர செங்கோட்டை, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள், திருநெல்வேலி, தென்காசியில் இருந்த தேனி செல்லும் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் வழியாக செல்கிறது. தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் பேருந்து நிலையம் வருவதால் போதிய இடவசதியின்றி வானகங்கள் வரிசை கட்டி நிற்கும் சூழல் நிலவுகிறது.
மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பேருந்து நிலையத்திற்கு வரும் வழியில் மார்க்கெட், அரசு மருத்துவமனையும், பேருந்து வெளியே செல்லும் வழியில் அரசு மேல்நிலைபள்ளியும், கடை வீதிகளும் உள்ளதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் காலதாமதம் ஆவதால் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையம் வராமல் செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கை, காத்திருப்பு அறை, குடிநீர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
நகரின் மைய பகுதியில் பேருந்து நிலையம் இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா, திருக்கல்யாணம், சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா, திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் புரட்டாசி உற்சவம் உள்ளிட்ட விழா காலங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவதில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாததால் பேருந்து நிலையம் அமைவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூர் உள்ளிட்ட 9 நகராட்சிகள் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என் நேரு அறிவித்தார்.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமையும் புதிய பேருந்து நிலையத்தில் 36 பேருந்துகள் நிறுத்தும் வசதி, வணிக வளாகம், வாகன காப்பகம், சுகாதார வளாகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட பயணிகளுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அறிவிப்பு வெளியாகி 4 மாதங்களாகியும், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான எந்த பூர்வாங்க பணியும் தொடங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘புதிய பேருந்து நிலையம் அமையும் நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி இன்னமும் தொடங்கவில்லை. தற்போதும் அங்கு தினசரி குப்பை கொட்டப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கத்திடம் கேட்ட போது, ‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன் பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.