மூணாறு-மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் சீரமைக்கப்பட்ட ரோடு இரண்டு மாதங்களில் சேதமடைந்தது.
மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் 42 கி.மீ. தொலைவில் உள்ள மறையூர் வரை ரூ.19.8 கோடி செலவில் தார் ரோடு சீரமைக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் 2018 முதல் மழையால் ஏற்பட்ட பேரழிவில் பல இடங்களில் ரோடு சேதமடைந்தன.
அதனை சீரமைக்கவும், ரோட்டில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் ரோட்டோரம் சிமென்ட் இடவும் ரூ.6 கோடி நிதியில் பணிகள் நடந்தன.
அந்த நிதியில் மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் உள்ள பாலம் அருகே 2021 ஆகஸ்ட்டில் பெய்த பலத்த மழையில் சேதமடைந்த ரோடு சீரமைக்கப்பட்டது.
அங்கு கன்னியாற்றின் கரையோரம் பாதுகாப்பு சுவர் கட்டி ரோட்டில் சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டன. அப்பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்து இரண்டு மாதங்களில் ரோட்டில் பதிக்கப்பட்ட சிமென்ட் கற்கள் பெயர்ந்து வருகிறது. அவை டூவீலர் போன்ற வாகனங்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளன. சிமென்ட் கற்கள் பதித்த இடத்தில் 20 மீட்டர் தூரம் ரோடு சீரமைக்காததால் குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் வாகனங்கள் கடும் சிரமத்துடன் கடந்து செல்கின்றன.
அங்கு மழை நீர் தேங்குவதால் ரோட்டின் இயல்பு தன்மை தெரியாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.
ரோடு பயன்பாட்டிற்கு வந்து இரண்டு மாதங்களில் சேதமடைந்ததால் ரூ.பல கோடி வீணடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement