சென்னை: Santhanam (சந்தானம்) தனது காமெடி காட்சிகளை எங்கிருந்து எடுப்பேன் என சந்தானம் சீக்ரெட் பகிர்ந்திருக்கிறார்.
கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சந்தானம். கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலுவுக்கு அடுத்து மாடர்ன் சினிமாவில் அதிகம் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர் சந்தானம். அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை அவர் பீக்கில் இருந்தபோது தமிழில் இருந்தது. அவரது கவுண்ட்டர்களும், டைமிங்குகளும் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவை.
நான் ரொம்ப பிஸி: சந்தானம் காமெடியனாக இருந்தபோது ஆஸ்திரேலியாவில் தலைவா ஷூட்டிங், ஹைதராபாத்தில் வீரம் ஷூட்டிங், எண்ணூரில் ஐ ஷூட்டிங், தூத்துக்குடியில் சிங்கம் 3 ஷூட்டிங் என பறந்து பறந்து நடித்தார். அந்த அளவுக்கு பிஸியாக இருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திலிருந்து ஹீரோவாக அறிமுகமானார்.
ஹீரோதான் ஆனாலும்: அவர் ஹீரோவாக நடித்தாலும் ஓவர் ஹீரோயிச சப்ஜெக்ட்டை தொடாமல் தனது பலமான காமெடி ஜானர் கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு படங்கள் எதுவும் ஹிட்டை கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் அவர் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். படமானது நாளை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் பேட்டி: அந்தப் படத்தின் ரிலீஸை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ப்ரோமோஷனில் தீவிரமாக இருக்கிறார். அப்படி ஒரு பேட்டி அளித்த அவர், “எனது தந்தை எப்போதுமே ஜாலியான கேரக்டர். கவுண்ட்டர் அடித்துக்கொண்டே இருப்பார். எம்ஜிஆர் மற்றும் தங்கவேலுவின் வெறித்தனமான ரசிகர்கள் அவர். ஆனால் சிறு வயதிலேயே என்னை ஆன்மீகம் பக்கம் அழைத்து சென்றார். ஆன்மீகத்தை எனக்கு அதிகமாக கொடுக்க அவர் நினைத்தார்.

ஏன்டா இப்படி அடிவாங்குற: எம்ஜிஆர் படங்களை எனக்கு அடிக்கடி போட்டுக்காட்டுவார். ஹீரோவாக நான் அறிமுகமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை பார்த்த அவர் ஏண்டா இப்படி அடிவாங்குற. எம்ஜிஆர் மாதிரி அடிச்சு பறக்கவிடணும் என்றார். என்னுடைய படங்களில் காமெடி காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் அப்பாவிடமிருந்து எடுத்துக்கொண்டவைதான். நான் என் பெற்றோருக்கு ஒரே பையன்.
அதுவும் அங்கேர்ந்துதான்: ஆனால் எனது சொந்தக்காரர்களுக்கு நிறைய குழந்தைகள் இருப்பார்கள். ஒருமுறை என்னிடம் கோவப்பட்ட எனது அப்பா, ‘ஊருல 10, 15 புள்ளைக வெச்சிருக்கவன் எல்லாம் நிம்மதியா இருக்கான். ஒரே ஒரு புள்ளைய வெச்சுக்குட்டு நான் படுற பாடு இருக்கே’ என சொன்னார். அதைத்தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஊருக்குள்ள 10,15 ஃப்ரெண்ட் வெச்சிருக்கவன் எல்லாம் நிம்மதியா இருக்கான்; ஒரே ஒரு ஃப்ரெண்ட வெச்சிட்டு நான் படுற பாடு இருக்கே என மாற்றினேன்” என்றார்.