சென்னை: உலகில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவர பணியாற்றுமாறு ஜி-20 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை குறித்த அமைச்சர்கள் கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: ஆறுகள் அதன் நீரை அவைகளே அருந்துவதில்லை, மரங்களும் அதன் பழங்களை அவைகளே உண்பதில்லை. மேகங்களும் அதன் நீரால் விளையும் தானியங்களை அவைகளே உண்பதில்லை. இயற்கை நமக்கு வழங்குகிறது. நாமும் இயற்கைக்கு வழங்கியாக வேண்டும். பூமித் தாயைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அடிப்படைக் கடமையாகும். இந்தக் கடமை நீண்ட காலமாக பலரால் புறக்கணிக்கப்பட்டதால் இன்று இது `பருவநிலை நடவடிக்கை’ எனும் வடிவத்தை எடுத்துள்ளது. இந்த பருவநிலை நடவடிக்கை கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்.
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் குறிப்பாக வளரும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. `ஐநா பருவநிலை உடன்படிக்கை’ மற்றும் `பாரிஸ் உடன்படிக்கை’ ஆகியவற்றின் கீழ் எடுக்கப்பட்ட உறுதிமொழிகள் மீது மேம்பட்ட நடவடிக்கை தேவை.
பல்லுயிர் பாதுகாப்பு, மறுசீரமைப்பு, செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் தொடர்ந்து முன்னணியில் உள்ளோம். நமது புவிகோளின் 7 வகையான புலிகளைப் பாதுகாப்பதற்காக இந்தியா அண்மையில் `சர்வதேச புலிகள் கூட்டணி’யை அறிமுகப்படுத்தியது. புலிகள் பாதுகாப்பு இயக்கத்தின் விளைவாக, இன்று உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில் காணப்படுகின்றன. சிங்க பாதுகாப்பு இயக்கம், டால்பிஃன் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்ந்த பணிகளிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்களிப்பால் இயக்கப்படுகின்றன. `அம்ரித் சரோவர் இயக்கம்’ என்ற தனித்துவமான நீர் பாதுகாப்பு முயற்சியின் கீழ் ஓராண்டில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எங்கள் `மழை நீரை சேமிப்போம்’ இயக்கம் மூலம் 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக `நமாமி கங்கைஇயக்கம்’ மூலம் ஆற்றின் பல பகுதிகளில் டால்பிஃன் மீண்டும் தோன்றும்ஒரு பெரிய சாதனைக்கு வழிவகுத்துள்ளது.
இந்த சூழலில், பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர ஒருபயனுள்ள சர்வதேச சட்ட நடைமுறைக்கு ஆக்கப்பூர்வமாக பணியாற்றுமாறு ஜி-20 நாடுகளை கேட்டுக்கொள்கிறேன். இயற்கை அன்னைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்துவிடக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து,சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதிஅரேபியா உள்ளிட்ட 33 நாடுகளிலிருந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட 13 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.