சர்வதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற புவனேஷ்வர் குமார் முடிவு? இன்ஸ்டா போஸ்ட் வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு அண்மைக்காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. முதலில் ஒருநாள் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த அவர், பின்னர் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவருக்கு இந்திய அணியில் இடம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள சிறிய மாற்றம் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

புவனேஷ்வர் குமாரை பொறுத்தவரையில் பந்தை ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவர். இவர் கடந்த 2012ம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமானார். 21 டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும், 121 ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளையும், 87 டி20-யில் 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்த புவனேஷ்வர்குமார், டி20 போட்டிகளில் விக்கெட் பெரிய அளவில் கைப்பற்றாவிட்டாலும் சிக்கனமாக பந்து வீசக்கூடியவராக இருந்து வருகிறார்.

இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராகவும் இருந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. அதில் இருந்து குணமான பின்னரும்கூட பிசிசிஐ தேர்வாளர்கள் புவனேஷ்வர் குமாரை இந்திய அணிக்கு தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கவில்லை. இப்போது அவருக்கு 33 வயதாகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த போது அவரது இடத்தை இளம் வீரர்கள் பிடித்து விட்டனர். அதன் பிறகு அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார். 

இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இதில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இந்நிலையில், புவனேஷ்வர் குமார் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் செய்துள்ள சிறிய மாற்றம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பயோவில் முன்பு ‘இந்தியன் கிரிக்கெட்டர்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது அதனை மாற்றி ‘இந்தியன்’ என மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? என்ற கேள்வியை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.