சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராஃப், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக மாலை நடைபெற உள்ளது.
சமீபத்தில், ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக ரசிகர்களுக்கு 1000 இலவச பாஸ்கள் வழங்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், காலை முதலே நேரு ஸ்டேடியத்தை நோக்கி பல மாவட்டங்களில் இருந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர்.
ஒரே சூப்பர்ஸ்டார் குரல்: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்த போது நடிகர் சரத்குமார் சூப்பர்ஸ்டார் என விஜய்யை அழைத்தது பெரும் சர்ச்சையாக சமூக வலைதளங்கள் முதல் மீடியாக்கள் வரை பெரும் விவாவத பொருளாகவே வெடித்தது.
இந்நிலையில், இன்று நடைபெற உள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசப் போகும் ஒவ்வொரு சினிமா பிரபலங்களும் ஒரே சூப்பர்ஸ்டார் குரலை எதிரொலிப்பார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காலை முதலே #JailerAudioLaunch டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பாடல்களிலேயே தெரிந்த எதிர்ப்பு: ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தால் டிரெண்டான நிலையில், செகண்ட் சிங்கிளான ஹுகும் மற்றும் மூன்றாவது சிங்கிளான ஜுஜுபி பாடல் முழுக்கவும் சூப்பர் சுப்பு வரிகளை போடாமல் ஹேட்டர்களுக்கான ஆப்பு பஞ்ச்களாகவே போட்டு நிரப்பி இருக்கிறார்.
அட்டகாசம் படத்தில் நடிகர் அஜித் “உனக்கென்ன உனக்கென்ன” பாடலில் இடம்பெற்ற வரிகளை விட எக்கச்சக்க பிட்டுகளுடன் இந்த பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குட்டி கதை யாருக்கா இருக்கும்: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோகன்லான், சிவராஜ்குமார், தமன்னா என ஒட்டுமொத்த இந்திய சினிமாவே வந்து ரஜினிகாந்தின் புகழ் பாடுவதை விட, ரஜினிகாந்த் கடைசியாக என்ன குட்டி கதை சொல்வார் என்பதை கேட்கவே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
மேலும், ரஜினிகாந்த் பேசப் போகும் குட்டி கதையில் கண்டிப்பாக யாருக்காவது ஒரு ஹிடன் அட்வைஸ் கண்டிப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.