ஆர்மீனியா: மத்திய கிழக்கு பகுதிக்கு அருகே அமைந்துள்ள குட்டி நாடான ஆர்மீனியாவுக்கு இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் அனுப்பப்பட்ட விவகாரம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேற்கு ஆசியாவில் மத்திய கிழக்கு பகுதிக்கு அருகே அமைந்துள்ள நாடுகள் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான். அருகருகே அமைந்துள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக இந்த விவகாரத்தில் கடந்த 2020இல் இரு தரப்பிற்கும் இடையே சுமார் 45 நாட்கள் போர் கூட இருந்தது.
அப்போது ரஷ்யா தலையிட்ட பிறகே இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. அதுவும் கடந்தாண்டு வரை மட்டுமே அங்கு சண்டை இல்லாமல் இருந்தது. அதன் பிறகு அவ்வப்போது மோதல் தொடர்ந்த நிலையில், கடந்தாண்டு செப். முதல் மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் அதிகரித்தது. இதனால் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் சண்டை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய ஆயுதங்கள்: இதற்கிடையே இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர்கள் (Pinaka multi barrel rocket launcher) ஈரான் வழியாக ஆர்மீனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அஜர்பைஜானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சர்கள் கடந்த செவ்வாய்கிழமை மாலை ஈரானின் நூர்துஸ் எல்லை வழியாக ஆர்மேனியாவுக்கு நுழைந்ததாக கூறப்படுகிறது.
ஆயுதங்கள் எடுத்து செல்வதை யாரும் கண்டறியாமல் இருக்க இதற்காகவே மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களில் இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
கவலை: இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் ஆர்மீனியாவுக்கு சென்றதாக செய்திகள் வெளியான சில மணி நேரத்தில் அஜர்பைஜான் அதிபரின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் ஹிக்மெட் ஹாஜியேவ் அந்நாட்டிற்கான இந்திய தூதர் ஸ்ரீதரன் மதுசூதனனை சந்தித்தார். ஆர்மீனியாவுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் ஆயுதங்கள் குறித்த வீடியோகளை சாட்டிகாட்டி ஹஜியேவ், இது தங்கள் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என தெரிவித்தாக கூறப்படுகிறது.
ஏன் முக்கியம்: இருப்பினும், ஆர்மீனியாவுக்கு இந்தியாவில் இருந்து தொடர்ச்சியாக ஆயுதங்கள் அனுப்பப்படும் என்றே தெரிகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் நட்பு நாடாக அஜர்பைஜான் கருதப்படுகிறது. இந்த இரு நாடுகளிடம் இருந்து ஆஜர்பைஜான் ஆயுதங்களை வாங்கு குவிக்கும் நிலையில், ஆர்மீனியா இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது.

கடந்த ஆண்டு புனேவை சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனமான பாரத் ஃபோர்ஜ் தயாரித்த 155 மிமீ 39-கலிபர் பீரங்கிகளுக்கு ஆர்மீனியா ஆர்டர் கொடுத்திருந்தது. அதேபோல கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்தியாவிடம் இருந்து பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர்கள், டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்க இரு நாடுகளும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்த்ககது கடந்தாண்டு ஆக்ஸ்ட் மாதம் டெல்லியில் டிவேன்ஸ் எக்ஸ்போ நடந்த நிலையில், அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆயுதங்கள்: வரும் காலத்தில் இந்தியாவிடம் இருந்து மேலும் பல ஆயுதங்களை பெற ஆர்மீனியா முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, வான் ஏவுகணைகள், டிரோன்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், வெடிமருந்துகள் ஆகியவற்றையும் இந்தியாவிடம் இருந்து வாங்க ஆர்மீனியா ஆர்வம் காட்டி வருகிறது. இந்த இரு நாடுகளும் அண்டை நாடுகள் இல்லை என்ற போதிலும், சமீபத்திய ஆண்டுகளில் ஆர்மீனியா-அஜர்பைஜான் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு மறைமுக உறவு உருவாகியுள்ளது.