நெய்வேலி: என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார் இதைத்தொடர்ந்து பாமகவினர் கல்வீசி தாக்கினர். போலீஸார் தடியடி நடத்தி, வஜ்ரா வாகனம் மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். மாலையில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
பாமக முற்றுகை போராட்டம்: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கத்தாழை, கரிவெட்டி, சுப்பையா நகர், வளையமாதேவி உள்ளிட்டப் பகுதிகளில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி அதற்கான இடத்தை கடந்த இரு தினங்களாக பலத்தப் போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், என்எல்சி நிறுவனத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: இதையடுத்து என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியது. மேலும் முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் சரக டிஐஜி ஜியவுல்ஹக் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நுழைவாயிலில் தள்ளுமுள்ளு: இந்த நிலையில் இன்று முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அன்புமணி ராமதாஸ்,முன்னதாக அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் உரையாற்றிவிட்டு, பாமக வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி ஆகியோர் சூழ, என்எல்சி நுழைவாயில் பகுதியை நோக்கி செல்லும்போது, போலீஸார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கல்வீச்சு தாக்குதல்: இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் மற்றும் அவருடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை, போலீஸார் கைது செய்து, அழைத்துச் செல்ல காவல் பேருந்தை எடுத்துவந்தனர். அப்போது அந்த பேருந்தை பாமக தொண்டர்கள் கல்வீசித் தாக்கி முகப்புக் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இருப்பினும் போலீஸார் அன்புமணி உள்ளிட்ட பலரை கைதுசெய்து, பேருந்தில் ஏற்றினர். அப்போது, பாமக தொண்டர்கள், பேருந்தை மறித்து, அன்புமணியை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டு, பேருந்து மறித்து தரையில் அமர்ந்தனர். ஒருசிலர் கட்சிக் கொடியுடன் காவல்துறை பேருந்து மீதேறினர். பின்னர் அவரை கீழிறக்கிய போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படிகூறிய போது, அதற்கு மறுத்த பாமகவினர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
அன்புமணி கைது: இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காவல்துறை மீதும், காவலர்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், ஒரு காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்வீச்சில் 3 காவல்துறை வாகனங்கள் சேதமடைந்த நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி, கூட்டத்தைக் கலைத்து, தடியடியும் நடத்தினர். அப்போதும் தொடர்ந்து கல்வீச்சும் மறியலும் ஏற்பட்டதால், அன்புமணி அமர்ந்திருந்த காவல் வாகனம் மீதும் கல்வீச்சுக்கு உள்ளானது. இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கிய பாமக வழக்கறிஞர் பாலு, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமரசம் செய்ததைத் தொடர்ந்து, அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் சுமார் 200 பேர் கைது செய்து அருகிலிருந்த திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
கலவரத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் சரக ஐஜி கண்ணன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக டிஐஜி ஜியாவுல் ஹக்கிடம் கேட்டபோது, மோதலில் காவலர் ஒருவர் காயமுற்றார்,. 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
சாலை மறியல்: அன்புமணி ராமதாஸை விடுவிக்க கோரி நெய்வேலி மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேருந்துகள் நிறுத்தம்: இதைத்தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறை சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புமணி விடுவிப்பு: நெய்வேலி என்எல்சியில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மண்ணுக்கும் மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகளைப் பெற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம். தமிழக முதல்வருக்கு மீண்டும் என்னுடைய அன்பான வேண்டுகோள், என்எல்சிக்காக நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்யுங்கள்” என்று அவர் கூறினார்.