சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில், சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன், அனிருத், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது ஜெயிலர் படம் குறித்து பேசிய நெல்சன் ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவங்களையும் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.
மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன் பணிபுரிந்தது குறித்து நெல்சன் உருக்கமாக பேசியது வைரலாகி வருகிறது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நெல்சன் நெகிழ்ச்சி : கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன். 4வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்த நெல்சன், தற்போது ஜெயிலரை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக்கி பட புகழ் வசந்த் ரவி ரஜினியின் மகனாக நடித்துள்ளார். நேர்மையான போலீஸ் ஆபிஸரான வசந்த் ரவியை வில்லன்கள் கடத்திவிட, அவர்களிடம் தனது மகனை ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் ஜெயிலர் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அனிருத்தின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் நெல்சன் நெகிழ்ச்சியாக பேசினார். ஜெயிலர் தனது 4வது படமாக இருந்தாலும், இதுதான் எனக்கு முதல் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி எனக் கூறி ரசிகர்களின் கைதட்டல்களை வாங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜெயிலர் படப்பிடிப்பில் தலைவருடன் பழகிய நாட்களை மறக்கவே முடியாது. ஷூட்டிங் நேரத்தில் அவர் ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார் எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் தலைவர் எப்போது ஜாலியாக கமெண்ட் செய்கிறார், எதற்கு கோபப்படுகிறார் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதேபோல், அவரது பாராட்டும் எப்போது வரும் என தெரியாது என்றுள்ளார்.
மேலும், ரஜினி சார் இல்லையென்றால் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் போன்ற சூப்பர் ஸ்டார்களை தன்னால் இயக்கியிருக்க முடியாது எனவும் நெல்சன் கூறினார். அவர்கள் அனைவருமே தலைவருக்காக மட்டும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நான் அவர்களிடம் கதை சொன்னபோது நிச்சயம் அது புரிந்திருக்காது, ஆனால், தலைவருக்காக கால்ஷீட் கொடுத்து இதில் நடித்தனர் எனவும் நெல்சன் பேசியது வைரலாகி வருகிறது.