வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, ‘லுக் அவுட் நோட்டீஸ்’ எனப்படும், தேடப்படும் குற்றவாளி என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெறும்படி, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ருஜிரா ஆகியோர் மீது, நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில் சட்ட
விரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து, அமலாக்கத் துறை சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.
![]() |
இதனால், இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.இதை எதிர்த்து, அபிஷேக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கூறுகையில், ”அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் குறித்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டு விட்டன. ”அவர்கள் வெளிநாடு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:லுக் அவுட் நோட்டீஸ் இப்போதும் இருப்பதால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், வெளிநாடுகளுக்கு செல்லும் யாராவது ஒருவர் எங்காவது தடுத்து நிறுத்தப் படுகிறார்.
இது போன்ற பிரச்னைகள் இருக்கக் கூடாது. இதனால், அமலாக்கத் துறையின் நேரமும் வீணாகிறது. நீதிமன்றத்தின் நேரமும் வீணாகிறது.
அபிஷேக் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள லுக் அவுட் நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர்கள் வெளிநாடு செல்ல நேர்ந்தால், முன்கூட்டியே அமலாக்கத் துறைக்கு தகவல் தெரிவிப்பர். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement