ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொகரம் ஊர்வலத்தின் போது கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மதத்தில் உள்ள 12 மாதங்களில் முதல் மாதம் மொகரமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் போர், சண்டை, சர்ச்சரவு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என சொல்லப்படுகிறது. அதேவேளையில் தங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் அதை எதிர்த்து போரிடலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவிலும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென எதிர்பாராமல் ஏற்பட்ட மின் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொகாரோ மாவட்டத்தில் கெட்கோ கிராமத்தில் இஸ்லாம் மக்கள் பெருமளவில் திரண்டு பேரணிக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். இந்த பேரணியை தலைமையேற்று நடத்தும் குழுவினர் இரும்பினால் ஆன கொடி கம்பத்தை தாங்கி பிடித்து நடந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கம்பம், மின் கம்பியில் உரசியதால் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே போல 10 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொகாரோ காவல்துறை கண்காணிப்பாளர் பிரியதர்ஷி அலோக் கூறுகையில், “சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பேரணி நடத்த எங்களிடம் அனுமதி கேட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னர்தான் நாங்கள் அனுமதி கொடுத்தோம்.
திட்டமிட்டபடி 6 மணிக்கு பேரணி தொடங்கியது. இந்நிலையில் கொடி கட்டிய இரும்பு கம்பம் 11,000 வோல்ட் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதனால் இதற்கு கீழே இருந்த மக்கள் மீது மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பொகாரோ பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல மாநிலத்தின் மற்ற இடங்களில் இரும்பு கம்பிகளில் கொடியேற்றி ஊர்வலமாக எடுத்துச்செல்ல காவல்துறையினர் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். மொகரம் கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் ஜார்க்கண்ட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.