ராமேசுவரம்: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை, ராமேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதன் தொடக்க விழா பொதுக் கூட்டம் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வாஜ்பாய் திடலில் நேற்று மாலைநடந்தது. இக்கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். டெல்லியில் இருந்து மதுரைக்கு தனி விமானத்திலும், பின்னர்மண்டபத்துக்கு ஹெலிகாப்டரிலும் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், அண்ணாமலையின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.‘மோடி என்ன செய்தார்?’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கவும், ஊழலில் இருந்து தமிழகத்தை விடுவிக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும்தான் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான நலத் திட்டங்களை இந்த பயணம் மீண்டும் கொண்டுவரும்
திமுகவும், காங்கிரஸும் மக்களிடம் வாக்கு கேட்கப் போகும்போது 2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர், இஸ்ரோவில் செய்த ஊழல்கள்தான் நினைவுக்கு வரும். இலங்கையில் தமிழர்களை அழிக்க காரணமாக இருந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி.
உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார். இக்கூட்டணி தலைவர்கள் தங்கள் மகன், மகள், மருமகனைத்தான் வளப்படுத்த நினைக்கின்றனர். உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக இது உள்ளது. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கினால், அவர்எல்லா ரகசியத்தையும் வெளியே சொல்லிவிடுவார். இதனால்தான் ராஜினாமா கடிதத்தை வாங்காமல் உள்ளனர். தமிழக மின் பகிர்மானக் கழகத்திலும் இந்த அரசு ஊழல் செய்துள்ளது.
10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? நான் அந்தக் கணக்கைத் தருகிறேன். அவர்களைவிட பாஜக 3 மடங்கு உயர்த்தித் தந்துள்ளது. சாலை அபிவிருத்திக்காக ரூ.45 ஆயிரம் கோடி, சென்னை மெட்ரோவுக்காக ரூ.73 ஆயிரம் கோடி, பிற ரயில்வே பணிகளுக்காக ரூ.34 ஆயிரம் கோடி தந்துள்ளோம்.
86 லட்சம் பேருக்கு நேரடி குடிநீர் இணைப்பு, 1.86 கோடி பேர் இலவச மருத்துவ சேவைத் திட்டத்தில் இணைப்பு, 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி, 1.10 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச அரிசி, 15 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அண்ணாமலை ஒரு ட்விட் போட்டால் திமுக ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது. இந்த நடைபயணம் முடியும்போது தமிழகத்தில் மாற்றம் நடக்கும். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிக எம்.பி.க்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.
அண்ணாமலை பேசியபோது, ‘‘தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். பிரதமர் மோடி இதயத்தால் தமிழராக இருக்கிறார். அவர் 3-ம் முறை பிரதமராக வரும்போது உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும். மக்களவை தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும்’’ என்றார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி ஆர்.முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், ஐஜேகே பொதுச் செயலாளர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன், அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.