பிலிபிட்:உத்தரப் பிரதேசத்தில், கணவனைக் கோடரியால் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக பெண் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டம் கஜ்ரவுலா அருகே, ஷிவ்நகர் கிராமத்தில் வசித்தவர் ராம்பா,55. இவரது மனைவி துலாரோ தேவி,50.
கடந்த 25ம் தேதி, தன் கணவரை காணவில்லை என துலாரோ தேவி, கஜ்ரவுலா போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறியதால், தேவி மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், கணவனைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார்.
போலீசிடம் துலாரோ தேவி அளித்துள்ள வாக்குமூலத்தில், “தன் கணவர் ராம்பால், தினமும் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார்.
“அவரது சித்திரவதையைத் தாங்க முடியாமல், கோடரியால் அவரைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தேன். உடல் பாகங்களை சிமென்ட் பைகளில் அடைத்து ஆற்றில் வீசினேன்,” என, கூறியுள்ளார்.
இதையடுத்து, தேவியின் வீட்டில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள ஆற்றில் இருந்து, கொலை செய்ய பயன்படுத்திய கோடரி மற்றும் ரத்தக்கரை படிந்த ஆடைகள் மற்றும் இரண்டு பைகளில் இருந்த உடல் பாகங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கஜ்ரவுலா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்ஸு ஜெயின், துலாரோ தேவியை கைது செய்தார்.
ஆனால், ‘தேவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்தது. அதனால், கணவனைக் கொலை செய்து விட்டார்’ என, ராம்பால் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்