சென்னை: நடிகர் ரஜினியின் ஜெயிலர் பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மேடையில் உற்சாகமாக பேசினர்.
ரஜினியின் பேச்சு எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் குட்டிக் கதையுடன் தன்னுடைய பேச்சை சிறப்பாக்கினார் அவர்.
ரஜினிக்கு மகன் இருந்திருந்தால் அது அனிருத்தான் என விக்னேஷ் சிவன் உருக்கம்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் படையப்பா படத்திற்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். நேற்றைய தினம் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன், 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து உற்சாகம் தெரிவித்தார். மேலும் ரஜினியின் பேச்சின்போது இடைமறித்து பேசிய ரம்யா கிருஷ்ணன், வயதானாலும் ரஜினியின் அழகும் ஸ்டைலும் அவருடனேயே இருப்பதாகவும் அவை கூடவே பிறந்தது, எங்கும் போகாது என்றும் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதேபோல நிகழ்ச்சியில் சிவராஜ்குமார், அனிருத், விக்னேஷ் சிவன், நெல்சன் உள்ளிட்ட பலரும் சிறப்பான பேச்சை வெளிப்படுத்தினர்.
இந்தப் படத்தில் நெல்சன் திலீப்குமார் ரஜினிக்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், தன்னுடைய வாழ்க்கையில் பல பெரிய வாய்ப்புகள் அனிருத் மூலமே தனக்கு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். ஜூலை 28ம் தேதி ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் நடந்தது குறித்து சுட்டிக் காட்டியுள்ள அவர், இந்த நாள் தன்னுடைய தந்தையின் நினைவு தினம் என்று கூறினார். கடந்த ஆண்டு இதே நாளில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி துவங்கியதாகவும், அந்த நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்றதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அதேபோல தற்போது ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரஜினியுடன் தான் மீண்டும் பங்கேற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஜெயிலர் படத்தில் அனிருத்தின் இசை குறித்தும் பாராட்டு தெரிவித்தார். ரஜினிக்காக பாடலை இசையமைக்கும்போது அனிருத் அதிகமான கவனம் மற்றும் உழைப்பை போடுவார் என்றும் சுட்டிக் காட்டினார். ரஜினிக்கு ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளதை குறிப்பிட்ட விக்னேஷ் சிவன், ரஜினிக்கு ஒரு மகன் இருந்திருந்தா அது அனிருத் தான் என்றும் கூறினார். படத்தில் அனிருத் இசையில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
குறிப்பாக தமன்னா, ரஜினி இணைந்து ஆட்டம் போட்ட காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. இந்தப் பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஹுகும், ஜூஜுபி ஆகிய பாடல்களும் வெளியாக ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இந்தப் படத்தில் ரஜினிக்காக சிறப்பான பிஜிஎம்மையும் அனிருத் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெறும் நிலையில், அனிருத் இசை கண்டிப்பாக முக்கியமான காரணமாக அமையும்.